மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை; 5 மணி நேரம் நடந்தது


மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை; 5 மணி நேரம் நடந்தது
x
தினத்தந்தி 7 Dec 2018 11:00 PM GMT (Updated: 7 Dec 2018 8:24 PM GMT)

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 5 மணி நேரம் சோதனை நடத்தினர்.

மதுரை,

தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில், நோயாளிகளிடமும் அவர்களது உறவினர்களிடமும் மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக ஏராளமான புகார்கள் எழுந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தமிழகம் முழுவதும் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக மதுரை பெரிய ஆஸ்பத்திரியிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியசீலன் வழிகாட்டுதலின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் அம்புரோஸ் ஜெயக்குமார், கண்ணன், குமரகுரு, ஹேமலதா, சூரியகலா ஆகியோரது தலைமையில் 20–க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்தனர். திடீரென்று ஆஸ்பத்திரிக்குள் வந்த அவர்கள், புதிதாக கட்டப்பட்டுள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்குள் தனித்தனி குழுக்களாக பிரிந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் ஊழியர்களின் வருகை பதிவேடு, நர்சுகளின் வருகை பதிவேடு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு நடத்தினர். இதுபோல் அங்கு பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களின் வருகை பதிவேடு, அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களையும் ஆய்வு செய்தனர். இதுபோல், மதுரை பெரிய ஆஸ்பத்திரியின் பிணவறை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். காலை 11.30 மணிக்கு தொடங்கிய இந்த அதிரடி சோதனை மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. இதன் காரணமாக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த அதிரடி சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்புரோஸ் ஜெயக்குமார் கூறும்போது, “அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்குவதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் நடந்த சோதனையில் பணம் ஏதுவும் கைப்பற்றப்படவில்லை. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக தான் இந்த அதிரடி சோதனை. பணம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். எனவே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு யாராவது லஞ்சம் கேட்டால் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும்“ என்றார்.


Next Story