துக்கம் விசாரிக்க சென்ற போது லாரி மோதி பள்ளி மாணவன் சாவு தாயார் உள்பட 2 பேர் படுகாயம்


துக்கம் விசாரிக்க சென்ற போது லாரி மோதி பள்ளி மாணவன் சாவு தாயார் உள்பட 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 8 Dec 2018 3:45 AM IST (Updated: 8 Dec 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே துக்கம் விசாரிக்க மோட்டார் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன், லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விபத்தில் அவனது தாயார் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆத்தூர்,

ஆத்தூர் அருகே உள்ள விநாயகர்புரத்தை சேர்ந்தவர் பெரியசாமி, டெம்போ டிரைவர். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 35). இவர்களது மகன் ஸ்ரீதரன் (12). இவன் அங்குள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். ஜெயலட்சுமி ஆத்தூரில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பெரியசாமியின் உறவினர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் 30-வது நாள் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று துக்கம் விசாரிக்க ஜெயலட்சுமி, ஸ்ரீதரன் ஆகியோர் பெரியசாமியின் அண்ணன் மகன் பெரியசாமி (28) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆத்தூரில் இருந்து சொக்கநாதபுரத்துக்கு சென்றனர்.

அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஸ்ரீதரன் பரிதாபமாக உயிரிழந்தான். ஜெயலட்சுமி, பெரியசாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

இந்த விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

Next Story