கம்பம்மெட்டில்: வாகன அனுமதி சீட்டு பெற போக்குவரத்து சோதனை சாவடி - அய்யப்ப பக்தர்கள் எதிர்பார்ப்பு


கம்பம்மெட்டில்: வாகன அனுமதி சீட்டு பெற போக்குவரத்து சோதனை சாவடி - அய்யப்ப பக்தர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 7 Dec 2018 10:00 PM GMT (Updated: 7 Dec 2018 8:59 PM GMT)

வாகன அனுமதி சீட்டு பெற கம்பம்மெட்டில் தற்காலிக போக்குவரத்து துறை சோதனை சாவடி அமைக்க வேண்டும் என அய்யப்ப பக்தர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கம்பம், 

சபரிமலை சீசனையொட்டி கேரள மாநிலத்தில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பல்வேறு மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். அவர்கள் தேனி, கம்பம்மெட்டு, குமுளி வழியாக கோவிலுக்குச் செல்கின்றனர். இதில் 90 சதவீதம் பேர் வாடகை வாகனங்களில் வருகின்றனர். இந்த வாகனங்கள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் போது (பெர்மிட்) அனுமதி சான்று பெறுவது அவசியம். அனுமதி சான்று இல்லாமல் செல்லும் வாகனங்கள் போலீசார் சோதனையின்போது அபராதம் வசூலிக்கின்றனர் அல்லது வாகனத்தை பறிமுதல் செய்கின்றனர்.

இதனை தடுக்கும் விதமாக ஒவ்வொரு மாநில எல்லையிலும் அந்தந்த மாநிலத்தின் போக்குவரத்துத்துறை சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டிருக்கும். தேனி மாவட்டத்தில் லோயர்கேம்பில் செயல்பட்டு வந்த போக்குவரத்து துறை சோதனைச்சாவடி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தேனி பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே மாற்றப்பட்டது. இந்நிலையில் சபரிமலைக்கு செல்லும் வெளிமாநில பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வாகனங்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதையடுத்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு குமுளி மலைப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.

அப்போது கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு வழியாக கட்டப்பனை, ஏலப்பாறை, குட்டிக்கானம், முண்டக்கயம், எரிமேலி வழியாக சபரிமலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். கம்பம்மெட்டில் உள்ள கேரள போக்குவரத்து துறை சோதனை சாவடியில் வாகன அனுமதி சான்றிதழ் பெறாமல் செல்லும் வாகனங்களை கேரள போலீசார் திருப்பி அனுப்பி விடுவார்கள். மீண்டும் அங்கிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேனி பழனிசெட்டிபட்டியில் போக்குவரத்து துறை சோதனை சாவடியில் வாகன அனுமதி சீட்டு பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் அய்யப்ப பக்தர்கள் பெரும் அவதிப்படுவார்கள். எனவே இதனை தவிர்க்கும் பொருட்டு கம்பம்மெட்டு பகுதியில் வாகன அனுமதி சீட்டு பெறும் வகையில் தற்காலிகமாக போக்குவரத்து துறை சோதனைச்சாவடி அமைக்க வேண்டும் என அய்யப்ப பக்தர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Next Story