மழை வெள்ளம்-நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடகில், புதிதாக 800 வீடுகள் முதல்-மந்திரி குமாரசாமி பூமி பூஜை செய்தார்


மழை வெள்ளம்-நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடகில், புதிதாக 800 வீடுகள் முதல்-மந்திரி குமாரசாமி பூமி பூஜை செய்தார்
x
தினத்தந்தி 8 Dec 2018 4:45 AM IST (Updated: 8 Dec 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

மழை வெள்ளம்-நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடகில், புதிதாக 800 வீடுகள் கட்ட முதல்-மந்திரி குமாரசாமி பூமி பூஜை செய்தார்.

குடகு, 

மழை வெள்ளம்-நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடகில், புதிதாக 800 வீடுகள் கட்ட முதல்-மந்திரி குமாரசாமி பூமி பூஜை செய்தார்.

வரலாறு காணாத சேதம்

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் கடந்த மே மாதம் இறுதியில் இருந்து இடைவிடாது பலத்த மழை கொட்டி தீர்த்தது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டது. மழை வெள்ளம், நிலச்சரிவால் குடகு மாவட்டம் முற்றிலும் உருக்குலைந்தது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமான வீடுகளும் இடிந்து விழுந்தன. இதனால் குடகில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டது.

உறவுகளையும், உடைமைகளையும் இழந்து ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியிருந்தனர். மழை நின்ற பின்னர் குடகு மாவட்டத்தில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குடகில் மழை வெள்ளம், நிலச்சரிவால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்து இருந்தது. மேலும் அதற்காக நிலமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பூமி பூஜை

அதன்படி குடகு மாவட்டத்தில் மழை வெள்ளம், நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்களுக்கு முதல்கட்டமாக 800 வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்து இருந்தது. ஒவ்வொரு வீடும் 2 அறைகளை கொண்டதாக இருக்கும். ஒரு வீட்டுக்கு ரூ.10 லட்சம் செலவிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குடகில் புதிதாக 800 வீடுகளை கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துகொண்டு 800 வீடுகள் கட்டுவதற்கான பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அங்கு நடந்த விழாவை முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியின்போது குடகில் புதிதாக கட்டப்படும் மாதிரி வீடுகள் பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டது.

குமாரசாமி பேட்டி

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்தில் புதிதாக 800 வீடுகளை கட்ட பூமி பூஜை செய்யப்பட்டுள்ளது. இந்த வீடுகள் 2 அறைகள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு வீடும் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்படுகிறது. மக்களுக்கு பிடித்த மாதிரியே இந்த வீடுகள் கட்டப்படும். மழை வெள்ளத்தால் குடகு மாவட்டத்தில் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டன. அங்கு மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு செய்து வருகிறது. குடகில் முதல்கட்டமாக 800 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டவுடன் அங்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

ரூ.180 கோடி நிதி...

சிலர் அரசியல் செய்வதற்காக குடகு மழை பாதிப்பு குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். அதாவது, குடகில் மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு ரூ.546 கோடி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால் மத்திய அரசு மழையால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களுக்கு தான் ரூ.546 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. குடகிற்கு மட்டும் அவ்வளவு நிதி ஒதுக்கவில்லை. குடகு மாவட்டத்தில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

குடகு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக, முதல்-மந்திரி வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.180 கோடி நிதி வந்துள்ளது. அந்த நிதி குடகு மாவட்ட வளர்ச்சிக்கு செலவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story