கர்நாடகத்தில் வசிக்கும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில நிதி உதவி திட்டத்தை பரமேஸ்வர் தொடங்கி வைத்தார்
கர்நாடகத்தில் வசிக்கும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில நிதி உதவி வழங்கும் திட்டத்தை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தொடங்கி வைத்தார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் வசிக்கும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில நிதி உதவி வழங்கும் திட்டத்தை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தொடங்கி வைத்தார்.
வெளிநாடுகளில் கல்வி பயில...
கர்நாடக அரசின் சமூக நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் (எஸ்.சி.) மற்றும் பழங்குடியினத்தை (எஸ்.டி.) சேர்ந்த மாணவ-மாணவிகள் வெளிநாடுகளில் கல்வி பயில நிதி உதவி அளிக்கும் ‘பிரபுத்த’ என்ற புதிய திட்ட தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கலந்து கொண்டு, புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
சமூக நலத்துறை சார்பில் கர்நாடகத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் அரசின் உதவிைய பெற்று வெளிநாடுகளில் கல்வி பயிலும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது சிறப்பான திட்டம் ஆகும். நான் 1980-ம் ஆண்டு அரசின் நிதி உதவியை பெற்று வெளிநாட்டில் பயின்றேன்.
மாணவர்களிடம் மன தைரியம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தில் சிலர் திறமை இருந்தாலும், வசதி வாய்ப்பு இல்லாததால் கல்வி பயில முடியாத நிலை உள்ளது. அத்தகைய குழந்தைகளுக்காக வெளிநாடுகளில் பயில இந்த திட்டம் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
இதன் மூலம் மாணவர்களிடம் மன தைரியம், உலக அறிவை பெற முடிகிறது. கர்நாடக அரசு கடந்த 2001-ம் ஆண்டு இந்த திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 197 மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி பயின்றுள்ளனர். இதில் 78 பேர் அமெரிக்காவில் படிப்பை முடித்துள்ளனர். பட்டப் படிப்பு படிக்கவும் நிதி உதவி வழங்கப்படுகிறது.
இவ்வாறு பரமேஸ்வர் பேசினர்.
இந்தியாவுக்கு திரும்ப நிபந்தனை
நிகழ்ச்சியில், சமூக நலத்துறை மந்திரி பிரியங்க் கார்கே பேசுகையில், “இந்த திட்டத்தில் வெளிநாட்டில் கல்வி பயில குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை இருந்தால் 100 சதவீத நிதி உதவி வழங்கப்படுகிறது. ரூ.15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 50 சதவீத நிதி உதவியை வழங்குகிறோம்.
ரூ.15 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு 33 சதவீத நிதியை வழங்குகிறோம். புத்தகம், தங்கும் வசதிக்கு ஆகும் செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. இந்த திட்டத்தில் கல்வி உதவி பெறுபவர்கள் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
Related Tags :
Next Story