24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி; கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்
கோவையில் 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை,
கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், இணையதள இணைப்புக்கான கட்டணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி கோவை சிவானந்தா காலனியில் கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பிரஸ்னேவ் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ஜோதி பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
உண்ணாவிரத போராட்டத்தை செயலாளர் சரவணன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த மாதம் 24-ந்தேதி நடைபெற்றது. அதில் தமிழக அரசு கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை பட்டப்படிப்பு என மாற்ற வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பல்வேறு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் அங்கு பணி புரிபவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த மாதம் 28-ந் தேதி முதல் ஆன்லைன் பணிகளை புறக்கணிக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த 5-ந் தேதி மாநிலம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்களில் இரவு நேர தர்ணா போராட்டம் நடந்தது.
எனவே தமிழக அரசு கிராம நிர்வாக சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் வருகிற 10-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தபோராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன், துணைத்தலைவர் சத்தியபாமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story