வேலூர் சத்துவாச்சாரியில் முதியவரிடம் நூதன முறையில் ரூ.11 லட்சம் மோசடி நைஜீரிய நண்பர் போல பேசி மர்ம நபர்கள் கைவரிசை
சத்துவாச்சாரியில் முதியவரிடம் நைஜீரிய நாட்டு நண்பர் போல் பேசி ரூ.11 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்,
வேலூர் சத்துவாச்சாரி பகுதி-4 தமிழ்நாடு அரசு குடியிருப்பை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 72). தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவருக்கு நைஜீரியா நாட்டில் ஒரு நண்பர் உள்ளார். இருவரும் இணையதள முகவரியில் பேசிக் கொள்வார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நைஜீரிய நண்பரின் இணையதள முகவரியை ‘ஹேக்’ செய்த மர்மகும்பல், அந்த இணையதள முகவரியில் இருந்து பாலசுப்பிரமணியனை தொடர்பு கொண்டு அந்த நண்பர் போலவே பேசி வந்துள்ளனர்.
இதையடுத்து அந்த மர்மகும்பல், எனக்கு (நண்பருக்கு) உடல்நிலை சரியில்லை. மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுகிறது என்று கேட்டுள்ளனர். கேட்பது தனது நண்பன் தான் என நினைத்த பாலசுப்பிரமணியன், பணத்தை அந்த மர்மநபர்கள் கூறிய வங்கிக்கணக்குகளுக்கு ஆன்லைனிலே அனுப்பி உள்ளார். ரூ.7 லட்சம் வரை பெற்றுக் கொண்ட அந்த மர்ம கும்பல் பாலசுப்பிரமணியனிடம் நீங்களும், உங்கள் மனைவியும் நைஜீரியா நாட்டிற்கு வந்து தங்கிவிடுமாறும், அதற்கு பாஸ்போர்ட், விசா எடுக்க ரூ.4 லட்சம் தேவைப்படுகிறது என்றும் கேட்டுள்ளனர். இதை நம்பிய பாலசுப்பிரமணியனும் ரூ.4 லட்சம் அனுப்பி உள்ளார்.
சில நாட்கள் கழித்து, இந்த விஷயம் பாலசுப்பிரமணியனின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் விசாரணையில் இணையதள முகவரியில் பேசியது மர்மகும்பல் என்றும், அவர்கள் பாலசுப்பிரமணியனை நூதனமாக ஏமாற்றி ரூ.11 லட்சம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிரமணியன் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார். போலீசார் பாலசுப்பிரமணியன் பணம் செலுத்திய வங்கிக் கணக்குகளை ஆராய்ந்ததில், அந்த வங்கிக் கணக்குகள் பெங்களூருவை சேர்ந்த ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ள பூர்ணிமா, நிர்மலா நாயக், தினேஷ் ஆகியோருடையது என்பது தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “பாலசுப்பிரமணியனை அவரது நண்பர் போல பேசி மர்மநபர்கள் ஏமாற்றி ரூ.11 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். பெங்களூருவில் இதேபோன்று பலரிடம் நைஜீரியாவை சேர்ந்த மர்மநபர்கள் மோசடி செய்துள்ளனர். பாலசுப்பிரமணியனிடம் மோசடி செய்துள்ளது வேலூரில் நடந்த முதல் சம்பவம் ஆகும். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். வங்கிக் கணக்குகளின் உரிமையாளர்களுக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ள, ஒரு தனிப்படை அலகாபாத் விரைந்துள்ளது” என்றனர்.
Related Tags :
Next Story