குடும்ப தகராறு காரணமாக: தலையணையால் அமுக்கி 2 மகள்களை கொன்ற கொடூர தந்தை - குடிபோதையில் வெறிச்செயல்
கோவையில் குடும்ப தகராறு காரணமாக தலையணையால் அமுக்கி 2 மகள்களை படுகொலை செய்த கொடூர தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
கோவை மசக்காளிபாளையம் பழனிகோனார் வீதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 46). இவருடைய மனைவி செல்வராணி (38). இவர்களுக்கு ஹேமாவர்ஷினி (15), ஸ்ரீஜா (8) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர். அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஹேமா வர்ஷினி 10-ம் வகுப்பும், ஸ்ரீஜா 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
பத்மநாபன் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். செல்வராணி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே பத்மநாபனின் தாயார் பிரேமா (63) தினமும் காலையில் வந்து சமையல் செய்து கொடுத்துவிட்டு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
பத்மநாபனுக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. அந்த கடனை அடைப்பதற்காக தனது மனைவியிடம் பணம் வாங்கி வருமாறு கேட்டு உள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பத்மநாபன் தனது மனைவியிடம் ரூ.70 ஆயிரம் கேட்டு உள்ளார். அதற்கு அவர் பணம் இல்லை என்று கூறியதால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது அங்கு வந்த தாயார் பிரேமாவிடமும் அவர் பணம் கேட்டு உள்ளார். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், இனிமேல் வீட்டிற்கு வரக்கூடாது என்று பிரேமாவை பத்மநாபன் அங்கிருந்து துரத்தி உள்ளார்.
பின்னர் இரவில் பத்மநாபன் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.இதைதொடர்ந்து கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வீட்டில் இருந்து அதிக சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கணவன்-மனைவி இடையே சமரசம் செய்துவைத்தனர்.அத்துடன் செல்வராணியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அவர்களையும் அங்கு வரவழைத்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த வெள்ளலூரை சேர்ந்த செல்வராணியின் சகோதரி யசோதாதேவி, குழந்தைகளையும், செல்வராணியையும் தனது வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறினார். அதற்கு பத்மநாபன் குழந்தைகள் என்னிடம் இருக்கட்டும், செல்வராணியை மட்டும் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறி உள்ளார். இதனால் அவர் செல்வராணியை மட்டும் தனது வீட்டிற்கு அழைத்து சென்று உள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு பிரேமா சமையல் செய்வதற்காக பத்மநாபன் வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது அவர் வீட்டில் இல்லை. கதவு சாத்தி இருந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பேத்திகள் ஹேமா வர்ஷினி, ஸ்ரீஜா இருவரும் கட்டிலில் படுத்து இருந்தனர். இதனால் குழந்தைகள் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்த பிரேமா, சமையல் செய்து முடித்தார்.
காலை 8 மணி ஆகியும் குழந்தைகள் இருவரும் எழுந்திருக்க வில்லை என்பதால் பள்ளிக்கு செல்ல நேரம் ஆகிவிட்டது எழுந்திருங்கள் என்று கூறியபடி பிரேமா, அவர்கள் 2 பேரையும் தட்டி எழுப்ப முயன்றார். அவர்கள் பேச்சு, மூச்சு இல்லாமல் படுத்து இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர் அலறினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது இரு சிறுமிகளும் பிணமாக கிடப்பது தெரியவந்தது.இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன், உதவி கமிஷனர் சுரேஷ், இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.இதையடுத்து கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மனைவி செல்வராணியை அவரது சகோதரி அழைத்துசென்ற பிறகு குடிபோதையில் இருந்த பத்மநாபனுக்கு தனது 2 மகள்களையும் கொன்று விட வேண்டும் என்ற கொடூர வெறி ஏற்பட்டு உள்ளது.
இதைதொடர்ந்து தூங்கி கொண்டு இருந்த அப்பாவி குழந்தைகளின் முகத்தில் தலையணையால் அமுக்கி உள்ளார். இதில் மூச்சு திணறிய சிறுமிகள் தப்பிக்க வழியின்றி துடிதுடிக்க இறந்துள்ளனர்.
குடிபோதையில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட பத்மநாபன் தலைமறைவாகி விட்டார்.
தலைமறைவான அவரை பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்து மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டார். தனிப்படையை சேர்ந்த போலீசார் தலைமறைவான பத்மநாபனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
முன்னதாக, இந்த கொலை குறித்த தகவல் அந்த பகுதியில் பரவியது. இதனால் அங்கு காலையில் இருந்தே ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் இறந்து கிடந்த குழந்தைகளை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. கோவையில் பெற்ற தந்தையே 2 மகள்களையும் தலையணையால் அமுக்கி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story