நாகர்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்


நாகர்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2018 11:10 PM GMT (Updated: 7 Dec 2018 11:10 PM GMT)

நாகர்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்,

கிராம நிர்வாக அலுவலர்களின் அடிப்படை கல்வி தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்திட வேண்டும், கூடுதல் பொறுப்பு வகிப்பவர்களுக்கு பொறுப்பூதியம் வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரியும் கிராமத்தில் தங்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர்களின் பதவியை மீண்டும் “டெக்னிக்கல் போஸ்ட்“ என மாற்ற வேண்டும், பங்கீட்டு ஓய்வூதிய முறைக்கு பதிலாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்று மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இதேபோல் குமரி மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் நாகேஸ்வரகாந்த் முன்னிலை வகித்தார்.

நிர்வாகிகள் ஈஸ்வரி, சுந்தர்ராஜ், விஜின், சிபுகுமார், மோகன், ஆன்றனி எழிலரசு ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் சங்க வட்ட தலைவர் செந்தில் கார்த்திகேயன் நன்றி கூறினார். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம் மாலை 6 மணி வரை நடந்தது. இதில் ஆண், பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Next Story