புயல் நிவாரணத்துக்கு நிதி ஒதுக்கீடு: தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


புயல் நிவாரணத்துக்கு நிதி ஒதுக்கீடு: தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 8 Dec 2018 5:00 AM IST (Updated: 8 Dec 2018 5:00 AM IST)
t-max-icont-min-icon

புயல் நிவாரணத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ததில் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துதுறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக அரசு காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக பா.ஜனதா எதிர்ப்பு தெரிவிக்கிறது. தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தான் அங்கு அணை கட்ட தொடர் முயற்சி மேற்கொள்கிறார்கள். அதனை தடுத்து நிறுத்த தி.மு.க. முயற்சிக்க வேண்டும்.

காவிரி ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு கர்நாடக மாநிலத்துக்கு எதுவும் செய்யவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். எனவே மேகதாது அணை சம்பந்தமாக முழு ஆய்வுகள் எடுக்க சொல்லியிருக்கிறார்கள். இந்த விஷயம் தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஒருபுறம் இருக்கட்டும். மேகதாது பிரச்சினையில் தி.மு.க.வினரும், காங்கிரஸ் கட்சியினரும் இரட்டை வேடம் போடுகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியை கர்நாடகத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும். அப்படி செய்யாதது தவறு.

மத்திய அரசு இயற்கை பேரிடர் நிதி வழங்கும் போது மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கும் விகிதாச்சாரத்தில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை. பாரபட்சம் காட்டப்படவும் இல்லை. மத்திய ஆய்வுக்குழு அறிக்கை, மத்திய அமைச்சர் குழு அறிக்கையில் எவ்வளவு கேட்கிறார்கள்? என்பதை பொறுத்து நிதி ஒதுக்கப்படுகிறது. மத்திய குழு ஆய்வு செய்து அதற்குத்தகுந்த நிதி கொடுக்கப்படும். குட்கா விவகாரம் மட்டுமல்ல, எந்த ஊழலாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா விஷயத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் அயல் நாட்டவர்கள் வந்து உளவு பார்க்கும் அளவுக்கு இருக்கிறார்கள் என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் எல்லா இடங்களிலும் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விஷயத்தில் தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது நாட்டுக்கு எதிராக மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.

அயல் நாட்டவர்கள் விருந்தினராக வந்தால் வரவேற்பேன். அவர்கள் நம்மை அழிக்க வந்தால் அவர்களுக்கு மகுடம் சூட்டி அழகுபார்க்க முடியுமா?. எனவே தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

முன்னதாக அவர் நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியில் கடந்த நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சமூக நலக்கூடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

குமரி மாவட்ட வளர்ச்சிக்காக டாக்டர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று மாலை நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாவட்ட வளர்ச்சிக்காக தான் கொண்டு வந்துள்ள வளர்ச்சி திட்டப் பணிகள், மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் அவர் டாக்டர்களுடன் கலந்துரையாடல் நடத்தி அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டனர்.



Next Story