மணப்பாறை, மருங்காபுரி பகுதியில் ‘கஜா’ புயலால் சேதமடைந்த: 125 அரசு கட்டிடங்களை சீரமைக்க ரூ.1 கோடியே 68 லட்சம் ஒதுக்கீடு - கலெக்டர் ராஜாமணி தகவல்
மணப்பாறை, மருங்காபுரி பகுதியில் ‘கஜா’ புயலால் சேதமடைந்த 125 அரசு கட்டிடங்களை சீரமைக்க ரூ. 1 கோடியே 68 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது:-
திருச்சி,
கஜா புயலின் தாக்கத்தால் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து கிடந்தன. சாலையோரம் கிடந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு விட்டன. குறிப்பாக ‘கஜா’ புயலால் மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் பள்ளிக் கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள் மிகுந்த சேதமடைந்தன. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்கள் அங்கன்வாடி மையங்கள் கணக்கெடுக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 125 கட்டிடங்கள் சேதமடைந்ததாக கணக்கெடுக்கப்பட்டது. தற்போது சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மணப்பாறை ஒன்றியத்தில் 29 பள்ளிக் கட்டிடங்கள், ரூ.45 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலும், 8 அங்கன்வாடி மையங்கள் ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலும், மருங்காபுரி ஒன்றியத்தில் 48 பள்ளிக் கட்டிடங்கள் ரூ.79 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலும், வையம்பட்டி ஒன்றியத்தில் 40 பள்ளிக் கட்டிடங்கள் ரூ.39 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் 125 அரசு கட்டிடங்கள் ரூ. 1 கோடியே 68 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
15 நாட்கள் முதல் 30 நாட்களுக்குள் பள்ளிக்கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story