ஏரி மராமத்து பணிக்கு ஒப்பந்தம் வழங்க: ரூ.18 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர் கைது
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஏரி மராமத்து பணிக்கு ஒப்பந்தம் வழங்க ரூ.18 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்லநாயகபுரம் பாசனதாரர் சங்க தலைவர் தமிழ்வேல். இவர் அங்குள்ள பெரிய ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்தி மராமத்து பணிக்கு ஒப்பந்தம் வழங்க கேட்டு அரியலூர்- செந்துறை சாலையில் உள்ள மருதையாறு வடிநில கோட்ட நீர்வள ஆதாரதுறை அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த ஒப்பந்தம் வழங்குவதற்கு ரூ.18 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று உதவி செயற்பொறியாளர் மணிமாறன் கூறினார். இவருக்கு இடைத்தரகராக அவரது கார் டிரைவர் சக்திவேல் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத தமிழ்வேல், அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார், தமிழ்வேலிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.18 ஆயிரத்தை நேற்று கொடுத்தனர். போலீசாரின் ஆலோசனைப்படி தமிழ்வேல் மருதையாறு வடிநில கோட்ட நீர்வளஆதார துறை அலுவலகத்துக்கு சென்று அங்கு உதவி செயற்பொறியாளர் மணிமாறனிடம் ரூ.18 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார், மணிமாறன் மற்றும் அவரது கார் டிரைவர் சக்திவேலை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் மணிமாறன் வீட்டிலும் போலீசார் சோதனை செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story