கிலோவுக்கு வெறும் 51 பைசா விலை கிடைத்ததால் அதிருப்தி வெங்காயம் விற்ற பணத்தை முதல்-மந்திரிக்கு அனுப்பிய விவசாயி


கிலோவுக்கு வெறும் 51 பைசா விலை கிடைத்ததால் அதிருப்தி வெங்காயம் விற்ற பணத்தை முதல்-மந்திரிக்கு அனுப்பிய விவசாயி
x
தினத்தந்தி 8 Dec 2018 5:03 AM IST (Updated: 8 Dec 2018 5:03 AM IST)
t-max-icont-min-icon

கிலோவுக்கு 51 பைசா விலை கிடைத்ததால் அதிருப்தி அடைந்த விவசாயி வெங்காயம் விற்ற பணத்தை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு அனுப்பி வைத்தார்.

நாசிக், 

கிலோவுக்கு 51 பைசா விலை கிடைத்ததால் அதிருப்தி அடைந்த விவசாயி வெங்காயம் விற்ற பணத்தை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு அனுப்பி வைத்தார்.

அதிருப்தி

மராட்டியத்தில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு மிக குறைந்த விலையே கிடைப்பதால் அதிருப்திக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக நாசிக் மாவட்டத்தில் வெங்காயத்திற்கு மிக குறைந்த விலையே கிடைத்து வருகிறது.

ஏற்கனவே இந்த மாவட்டத்தில் உள்ள நிப்பாட் தாலுகாவை சேர்ந்த சஞ்சய் சாதே என்ற விவசாயி தனது 750 கிலோ வெங்காயத்தை விற்றதில் கிடைத்த 1,064 ரூபாயை பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

குறைந்த விலை

இதேபாணியில் மற்றொரு விவசாயியும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

நாசிக் மாவட்டம் யவோலா தாலுகா அந்தர்சுல் பகுதியை சேர்ந்தவர் சந்திரகாந்த் பாய்கான். விவசாயியான இவர் விளைவித்த 545 கிலோ வெங்காயத்தை யவோலாவில் உள்ள வேளாண் உற்பத்தி சந்தை கமிட்டிக்கு(ஏ.பி.எம்.சி.) கொண்டு சென்றார்.

ஆனால் கிலோ வெங்காயம் வெறும் ரூ.51 பைசாவுக்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டதால் அவர் அதிர்ச்சியில் உறைந்தார். இருப்பினும் வேறுவழியின்றி வெங்காயத்தை விற்பனை செய்தார். அதிலும் ஏ.பி.எம்.சி. கட்டணத்தை கழித்துக்கொண்டு வெறும் ரூ.216 மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த அவர் அந்த பணத்தை அப்படியே முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து விவசாயி சந்திரகாந்த் பாய்கான் கூறியதாவது:-

வறட்சி நிலை

தற்போது எங்களது பகுதியில் வறட்சி நிலவுகிறது. இதற்கிடையே இவ்வளவு குறைந்த வருமானத்தை கொண்டு எப்படி குடும்பத்தை நடத்துவது? எப்படி கடனை திரும்ப செலுத்துவது?

என்னுடைய வெங்காயம் தரமான நிலையில் இருந்தபோதும், அதற்கான சரியான விலை கிடைக்கவில்லை. எனவே எனது வருத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக கிடைத்த 216 ரூபாயை முதல்-மந்திரிக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாட்டின் மொத்த வெங்காய உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீதம் நாசிக் பகுதியில் இருந்து தான் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story