மார்த்தாண்டம் மேம்பாலத்தில் 16–ந் தேதி முதல் போக்குவரத்து தொடக்கம் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்


மார்த்தாண்டம் மேம்பாலத்தில் 16–ந் தேதி முதல் போக்குவரத்து தொடக்கம் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 8 Dec 2018 11:00 PM GMT (Updated: 8 Dec 2018 4:28 PM GMT)

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வருகிற 16–ந் தேதி முதல் போக்குவரத்து தொடங்கும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

குழித்துறை,

மார்த்தாண்டத்தில் பம்மம் பகுதியில் இருந்து வெட்டுமணி வரை சுமார் 2½ கிலோ  மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம்  இந்த பாலம் மக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டது. அப்போது, லட்சக்கணக்கான மக்கள் பாலத்தின் மீது ஏறி சென்று பார்வையிட்டனர்.

தற்போது பாலம் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பாலத்தின் மீது மின் விளக்குகள் அமைக்கும் பணி உள்ளிட்ட இதர வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனை மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

மார்த்தாண்டம் பாலம் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த பாலம் வருகிற 16–ந் தேதி முதல் போக்குவரத்துக்கு திறந்து விடப்படும். இதுபோல பார்வதிபுரம் மேம்பாலமும் அதே நாளில் போக்குவரத்துக்கு திறந்து விட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். அவருடன் பா.ஜனதா நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

மார்த்தாண்டத்தில் மேம்பாலம் திறக்கப்படும் பட்சத்தில் போக்குவரத்து நெருக்கடி குறையும். இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ– மாணவிகள், அலுவலகம் செல்வோர் இதனால் மகிழ்ச்சி அடைவார்கள்.

Next Story