1000 ஆண்களுக்கு 730 பெண்களே உள்ளனர்: பாலின கொடுமைகளை தடுக்க இளைய சமுதாயத்தினர் முன் வர வேண்டும் மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு


1000 ஆண்களுக்கு 730 பெண்களே உள்ளனர்: பாலின கொடுமைகளை தடுக்க இளைய சமுதாயத்தினர் முன் வர வேண்டும் மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 8 Dec 2018 11:00 PM GMT (Updated: 8 Dec 2018 5:19 PM GMT)

1000 ஆண்களுக்கு 730 பெண்களே உள்ளனர். எனவே, குழந்தை திருமணம், பாலின கொடுமைகளை தடுக்க இளைய சமுதாயத்தினர் முன்வர வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி பேசினார்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த மாதம் 14-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் போலீசாருடன் இணைந்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் நண்பர்கள் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்றது. மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்பாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சபரி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன், திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு 300 போலீஸ் நண்பர்கள் குழுவினர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

முன்னதாக மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக 19 ஆயிரம் கருக்கலைப்பு நிகழ்ந்திருப்பது வேதனையான செய்தி. அந்த கருக்கலைப்பு மூலமாக பெண் சிசுக்களை கொலை செய்திருப்பது கொடுமையாகும். இதன் விளைவாக, ஆயிரத்துக்கு ஆயிரம் பெண்கள் - ஆண்கள் இருக்க வேண்டிய நிலையில், தற்போது பெண்களின் நிலை ஆயிரம் பேருக்கு 730 ஆக வந்து நிற்கிறது.

அதன் நிலைமை என்னவாக இருக்கும் என் நினைக்கிறீர்கள். 10 ஆண்கள், 10 பெண்கள் அவர்கள் சேர்ந்தால் 2 பேருக்குமிடையே நடைபெறும் நட்பு, பாசம், காதல், காமம் என எதுவாக இருந்தாலும் அதில் பிரச்சினை இருக்காது. 10 ஆண்கள் இருக்க வேண்டிய இடத்தில் 3 அல்லது 4 பெண்கள் இருக்கிறார்கள் என்றால் போட்டி, பொறாமை, காதல் வசப்படுத்துதல், சண்டை சச்சரவு என்று, இந்த மாவட்டத்தில் சமூக அமைதி கெட்டுப்போகும் நிலையில், அவர்களுக்குள்ளே வெட்டு, குத்து, கொலை என வழக்குகள் பதிவிட நேரிடும்.


பெண் விகிதம் குறைந்தால் ஆண்களுக்கு சமமாக இல்லை என்றால் பாலின கொடுமைகள் அதிகமாக நடைபெறும். குழந்தைகள் திருமணங்களையும், பாலின கொடுமைகளையும் தடுக்க இளைய சமுதாயத்தினர் முன் வர வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு போலீஸ் நண்பர்கள் இருந்து இந்த மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தலைமை ஆசிரியர்கள் ஹுபர்ட் தனசுந்தரம், ஜெயராஜ்சாமுவேல், சேகர், போலீஸ் நண்பர்கள் குழு நிர்வாகிகள் எஸ்.ரவி, ஏ.தியாகராஜ், பி.சிவராமன் மற்றம் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஜான்கிங்ஸ்லி நன்றி கூறினார்.

Next Story