திருப்பாச்சனூர் மலட்டாற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவுரை


திருப்பாச்சனூர் மலட்டாற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவுரை
x
தினத்தந்தி 9 Dec 2018 5:00 AM IST (Updated: 8 Dec 2018 11:21 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே திருப்பாச்சனூர் மலட்டாற்றின் குறுக்கே ரூ.20¾ கோடியில் புதிதாக அமைக்கப்பட உள்ள மேம்பால கட்டுமான பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவுரை வழங்கினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே திருப்பாச்சனூர் கிராமத்தில் மலட்டாறு செல்கிறது. இந்த ஆற்றை பொதுமக்கள் கடந்து செல்ல ஏதுவாக பல ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

மழைக்காலங்களின்போது இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்பட்சத்தில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்லும். அப்போது இந்த ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு சுற்றியுள்ள காவணிப்பாக்கம், தளவானூர், தென்குச்சிப்பாளையம், சேர்ந்தனூர் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படுகிறது.

தற்போது இந்த தரைப்பாலம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதாலும், மழைக்காலத்தின்போது போக்குவரத்து பாதிக்கப்படாத அளவிற்கு சிரமமின்றி சென்றுவர ஏதுவாகவும் இங்குள்ள மலட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என்று சுற்றுவட்டார கிராம மக்கள், விவசாயிகள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இங்குள்ள மலட்டாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க அரசு உத்தரவிட்டதோடு அதற்காக ரூ.20 கோடியே 82 லட்சத்தை ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து இந்த ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், திருப்பாச்சனூருக்கு சென்று அங்குள்ள மலட்டாற்றில் மேம்பாலம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார். அப்போது மேம்பால பணியை விரைவில் தொடங்குமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், ராஜேந்திரன் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story