புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த மாற்று தொழில் தொடங்க முன்வர வேண்டும் வைரமுத்து வலியுறுத்தல்


புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த மாற்று தொழில் தொடங்க முன்வர வேண்டும் வைரமுத்து வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Dec 2018 10:45 PM GMT (Updated: 8 Dec 2018 6:37 PM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயம் சார்ந்த மாற்று தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வலியுறுத்தி உள்ளார்.

தஞ்சாவூர்,

‘கலப்பை மக்கள் இயக்கம்’ சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் பசுமாடுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. தற்போது மூன்றாவது கட்டமாக தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, நாகை பகுதிகளை சேர்ந்த ஏழை பெண்கள் 1008 பேருக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சையில் நேற்று நடந்தது.

விழாவிற்கு கலப்பை மக்கள் இயக்கத்தை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமை தாங்கினார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆடுகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு விவசாயத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. எனவே இந்தியாவில் அன்னிய முதலீடுகள் கிடைக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை தமிழகத்துக்கு கொண்டு வந்து புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த மாற்று தொழில் தொடங்க முன்வர வேண்டும். புயல் சேதங்களை பார்வையிட வந்த மத்திய குழுவினரின் காலில் பெண்கள் விழுந்ததை கண்டு நான் அழுதேன்.

அவர்கள் கடமையை செய்ய வந்துள்ளார்கள். ஆனால் நாம் உரிமையை கேட்கிறோம். உரிமையை கேட்க யார் காலிலும் விழ வேண்டாம். தமிழர்கள் யார் காலிலும் விழக்கூடாது. தமிழர்களின் துயரை துடைக்க அதிக நிதி ஒதுக்கி, மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும். விவசாயிகள் யாரும் தற்கொலை செய்யக்கூடாது. உயிர் போனால் திரும்பி வராது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கவிஞர் வைரமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை என்கிறீர்கள். மின்சாரம் என்பது வாழ்வின் மிகப்பெரிய சக்தியாகி விட்டது. மின்சாரத்தை இழந்து விட்டு தங்கள் வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாது. மின்சார ஊழியர்களும் தங்களுடைய முழு திறைமையை பயன்படுத்தி பணிகள் செய்து வருகிறார்கள். அவர்களை குறை சொல்லவும் முடியாது. இன்னும் விரைவுபடுத்த வேண்டும்.

விவசாயத்தை மட்டும் நம்பி வாழும் மக்களுக்கு மாற்று தொழில் ஏற்படுத்த வேண்டும். அதாவது கல்வி கற்ற இளைஞர்கள் இந்த ஊரை விட்டு வெளியே போய் விடுகிறார்கள். அந்த கிராமத்தை துறந்து விடுகிறார்கள். கிராமத்தை விட்டு வெளியே போன இளைஞர்கள் மீண்டும் அந்த மண்ணை நினைத்து பார்க்க வேண்டும். அந்த மண்ணுக்கு வந்து தங்களால் ஆன சில பணிகளை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும். அதற்கு தொழிற்பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு ஒப்புதலுடன் கர்நாடக அரசு முயல்கிறது. இதை இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையாக கருதாமல் இந்தியாவின் பிரச்சினையாக கருத வேண்டும். சர்வதேச பிரச்சினையாக கருத வேண்டும். ஏனென்றால் ஒரு நதி உற்பத்தியாகிற இடத்தை விட எங்கு சென்று பாசன பரப்புக்கு செல்கிறதோ அந்த பரப்புக்குத்தான் அதிக உரிமை என்பது சர்வதேச சட்டம். இதை கர்நாடக அரசு மதிக்கிறதா? என்பதை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல நாங்கள் ஏற்கனவே காய்ந்தும், ஓய்ந்தும் உள்ளோம். இந்த நேரத்தில் எங்கள் நதி தடுக்கப்பட்டால் எங்கள் வாழ்வை மட்டும் அல்ல, எதிர்காலத்தையே சிதைத்து விடும் என்று தமிழர்கள் அஞ்சுகிறார்கள். அந்த அச்சத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது.

புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் வந்து பார்வையிட்டு இருக்க வேண்டும். இந்த பாதிப்பை பிரதமர் பார்வையிட்டு இருந்தால் இன்னும் நிதி அதிகமாகவும், விரைவாகவும் தமிழக மக்களுக்கு சேர்ந்து இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளின் நிலங்களை மீட்டுக்கொடுக்க வேண்டும். இழப்பை கண்டறிந்து அதில் இருந்து அவர்களை மீட்டெடுத்து, அதற்கு தேவையானவற்றை மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டும். இது அரசியல் வாக்குறுதியாக இல்லாமல், வாழ்வியல் வாக்குறுதியாக கருத வேண்டும்.

புயல் பாதித்த பகுதியை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். பேரிடர் நிதி என்பது குறைவாகத்தான் ஒதுக்கப்பட்டு உள்ளது. பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து அந்த நிதியில் கைவைத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குறைவாகத்தான் வந்து சேரும். எனவே சிறப்பு பேரிடர் பாதித்த மாவட்டங்களாக இதை அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story