காவிரி பிரச்சினையில் முந்தைய அரசுகள் எதுவும் செய்யவில்லை என்று “தி.மு.க.வை வைகோ மறைமுகமாக தாக்குகிறார்” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
காவிரி பிரச்சினையில் முந்தைய அரசுகள் எதுவும் செய்யவில்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தி.மு.க.வை மறைமுகமாக தாக்குகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கோவில்பட்டி,
காவிரி பிரச்சினையில் முந்தைய அரசுகள் எதுவும் செய்யவில்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தி.மு.க.வை மறைமுகமாக தாக்குகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
உயர்கல்வித்துறையில் முதலிடம்
கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதனால் அகில இந்திய அளவில் 25 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வி பயிலும்போது, தமிழகத்தில் 46.9 சதவீத மாணவர்கள் உயர்கல்வி பயிலுகின்றனர். அகில இந்திய அளவில் உயர்கல்வித்துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். தி.மு.க. 14 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்தது. அப்போது அவர்கள் தமிழகத்துக்கு நன்மை பயக்கும் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வெளியானபோது, அதனை மத்திய அரசிதழில் வெளியிட முடியவில்லை. அப்போது ஆளுங்கட்சியான தி.மு.க.வுடன் வைகோ கூட்டணியில் இருந்தார்.
தி.மு.க. மீது வைகோ தாக்கு
வைகோ பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், தி.மு.க. கூட்டணியில் மத்திய அரசில் அங்கம் வகித்தபோதும், தமிழகத்துக்கு என்ன திட்டங்களை பெற்று தந்தார்?. ஆனால் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா உடனே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன் பயனாக காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட முடிந்தது.
காவிரி நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். அதனை கடந்த 1974-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி புதுப்பிக்கவில்லை. இதனால்தான் காவிரி பிரச்சினையில் முந்தைய அரசுகள் எதுவும் செய்யவில்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தி.மு.க.வை மறைமுகமாக தாக்கி பேசி வருகிறார்.
மத்திய அரசுக்கு அழுத்தம்
ஆனால் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் வந்த இந்த அரசு தமிழக மக்களுக்காக அயராது பாடுபட்டு வருகிறது. கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டக்கூடாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம்.
காவிரி மேலாண்மை வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 4 மாநிலங்களின் கருத்துகளை கேட்டறியாமல், காவிரி ஆற்றில் எந்த திட்ட பணிகளும் செய்யக்கூடாது என்று காவிரி மேலாண்மை வாரியத்தில் விதி உள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்துவார். இதுதொடர்பாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
Related Tags :
Next Story