குடும்ப தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு கணவர்-மாமியாருக்கு வலைவீச்சு


குடும்ப தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு கணவர்-மாமியாருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Dec 2018 3:45 AM IST (Updated: 9 Dec 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே குடும்ப தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக கணவர்-மாமியாரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குத்தாலம்,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே கழனிவாசல் மாங்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் சுரேந்தர். இவருடைய மனைவி இந்திரா (வயது 35). இவர்களுக்கு திருமணாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. கணவர்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டதால் பிரிந்தனர். பின்னர் சமாதானமாகி இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்திரா, தனது மகளுடன் மயிலாடுதுறைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த சுரேந்தர், என்னிடம் சொல்லாமல் எங்கே சென்று வருகிறாய்? என்று கூறி இந்திராவிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சுரேந்தர், இந்திராவை அரிவாளால் வெட்டினார்.

மேலும் சுரேந்தருடன் சேர்ந்து அவரது தாய் லலிதாவும், இந்திராவை திட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த இந்திரா மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திரா கொடுத்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் சுரேந்தர், மாமியார் லலிதா ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story