2 மகள்களை கொன்று விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு திட்டமிட்ட தந்தை


2 மகள்களை கொன்று விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு திட்டமிட்ட தந்தை
x
தினத்தந்தி 9 Dec 2018 12:00 AM GMT (Updated: 2018-12-09T00:23:32+05:30)

கோவையில், 2 மகள்களை கொன்று தப்பிய தந்தை ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்ய திட்டமிட்டு இருந்த போது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

சிங்காநல்லூர்,

கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் பழனிகோனார் வீதியை சேர்ந்தவர் பத்மநாபன்(வயது 46). தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றினார். இவருடைய மனைவி செல்வராணி(38). இவர்களின் மகள்கள் ஹேமா வர்ஷினி(15), ஸ்ரீ ஜா(8) ஆகியோரை கடந்த 6–ந் தேதி இரவு பத்மநாபன் தலையணையால் அமுக்கி கொன்று விட்டு தப்பிச் சென்று விட்டார். பாசமாக வளர்த்த மகள்களை தந்தையே கொன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து கோவை சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மகள்களை கொன்று விட்டு தப்பிய பத்மநாபனை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பத்மநாபனை கோவை ஹோப் கல்லூரி அருகே உள்ள தண்டவாளம் அருகே உட்கார்ந்திருந்த போது மடக்கி பிடித்தனர். அவரை சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:–

கைது செய்யப்பட்ட பத்மநாபனின் சொந்த ஊர் சேலம். பட்டப்படிப்பை பாதியில் விட்டவர். பல ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் இருந்து மதுரை சென்று ஏ.டி.எம். மையங்களில் இரவு காவலாளியாகவும் பகலில் கடையிலும் வேலை பார்த்துள்ளார். அவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் பிறந்தன. அங்கு குடும்பம் நடத்த போதுமான வருமானம் இல்லை. இதைத்தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பத்மநாபன் குடும்பத்துடன் கோவை வந்து குடியேறினார். கோவை சவுரிபாளையத்தில் தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதியாக பணியாற்றினார்.

இதற்கிடையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு மனைவி செல்வராணி பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டார். இதற்கிடையில் பத்மநாபன் கோவை சிட்கோவில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக சேர்ந்தார். அங்கு அவருக்கு குறைவான சம்பளம் தான் கிடைத்தது. அதை வைத்து வீட்டு வாடகை கொடுத்து மனைவி, மகள்கள், தாயார் ஆகியோரை காப்பாற்ற முடியாததால் கடன் வாங்கினார். தனது தாயார் பிரேமாவிடமே ரூ.60 ஆயிரம் வரை கடன் வாங்கியுள்ளார்.

போதிய வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்ட பத்மநாபன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். மனைவி செல்வராணி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் அவருக்கும் மருத்துவ செலவு செய்ய வேண்டியிருந்தது. இதனால் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடமும் தாயாரிடமும் சண்டை போட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 6–ந் தேதி இரவும் பத்மநாபன் மதுகுடித்து விட்டு மகள்களுக்கு கோழிக்கறி வறுவல் வாங்கி வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததும் மகள்களுக்கு வறுவலை ஊட்டி விட்டுள்ளார். கணவர் குடித்து விட்டு வந்ததால் ஆத்திரம் அடைந்த செல்வராணி அவருடன் சண்டை போட்டுள்ளார். அப்போது அங்கு வந்த தாயார் பிரேமாவிடம் ரூ.70 ஆயிரம் கடன் கேட்டுள்ளார். ஆனால் அவர் தன்னிடம் பணம் இல்லை என்றதும் அவரை பத்மநாபன் அடித்து விரட்டி விட்டார். அதன்பின்னர் கணவன்–மனைவி இடையே மீண்டும் தகராறு நடந்தது. ஒரு கட்டத்தில் மனம் வெறுத்துப்போன செல்வராணி வீட்டுக்கு வெளியே வந்து கணவனை கண்டித்து சத்தம் போட்டுள்ளார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் வந்து சமரசம் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த செல்வராணியின் சகோதரி யசோதாதேவி குழந்தைகளையும், செல்வராணியையும் தன்னுடன் அழைத்து செல்வதாக கூறினார். ஆனால் 2 மகள்களும் தந்தையுடனேயே இருப்பதாக கூறி விட்டதால் செல்வராணி மட்டும் சகோதரி வீட்டுக்கு சென்று விட்டார்.

வழக்கமாக பத்மநாபனின் தாயார் பிரேமாவும் அந்த வீட்டில் தான் இரவில் படுத்துக் கொள்வார். ஆனால் அன்று மகன் சண்டை போட்டதால் பக்கத்து வீட்டு திண்ணையில் அவர் படுத்து தூங்கி விட்டார். இரவில் குடிபோதையில் இருந்த பத்மநாபன் 2 மகள்களையும் தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு காலையில் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து சென்று விட்டார். காலையில் பத்மநாபனின் தாயார் பிரேமா வந்து பார்த்த போது தான் 2 பேரும் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

பத்மநாபன் 2 மகள்களையும் கொலை செய்த பின்னர் அவரும் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் அந்த வீட்டின் கூரை உயரம் குறைவாக இருந்ததால் அவர் அந்த முயற்சியை கைவிட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற பத்மநாபன் மதுக்கடைக்கு சென்று மது வாங்கி குடித்துள்ளார். அதன்பின்னர் ஒரு கால் டாக்சி டிரைவரிடம் செல்போன் வாங்கி தனது தாயார் பிரேமாவின் செல்போனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் எடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து பத்மநாபன் கால் டாக்சி டிரைவரிடம் செல்போனை கொடுத்து விட்டு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். இரட்டை கொலை சம்பவம் வெளியே தெரிந்த பின்னர் பிரேமாவின் செல்போனை போலீசார் ஆய்வு செய்த போது கடைசியாக வந்த செல்போன் எண்ணுக்கு டயல் செய்து விசாரித்த போது தான் அது கால் டாக்சி டிரைவருடையது என்பது தெரியவந்தது.

அவரிடம் விசாரித்தபோது யாரோ ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து பேசுவதற்கு செல்போன் கேட்டார் என்று கூறினார். எனவே மகள்களை கொலை செய்த பின்னர் தாயாரிடம் பத்மநாபன் பேச முயற்சித்தது தெரியவந்தது. அதன்பின்னர் மூன்று முறை பத்மநாபன் மதுக்கடைக்கு சென்று மது குடித்துள்ளார்.

பத்மநாபன் பற்றி அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரித்த போது அவர் இயல்பாகவே நல்ல குணம் உள்ளவர் என்றும் கடன் தொல்லை, குடும்பத்தில் நிம்மதியின்மை, போதிய வருமானம் இல்லாதது போன்ற காரணங்களினால் தான் மனம் வெறுத்து அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளது தெரியவந்தது. அந்த வெறுப்பினால் தான் அவர் மகள்களையும் கொன்றிருக்கலாம் என்ற தகவல் கிடைத்தது. மேலும் மகள்களை கொலை செய்த பின்னர் வீட்டிலேயே தற்கொலைக்கு முயன்றதற்கான அடையாளங்களும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பத்மநாபன் அடுத்து தற்கொலைக்கு முயற்சிக்கலாம் என்ற முடிவுக்கு தனிப்படை போலீசார் வந்தனர். இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் ரெயில் தண்டவாளப்பாதைகளில் ரோந்து சென்றனர். அதன்படி நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் போலீசார் ரோந்து சென்றபோது ஹோப் கல்லூரி அருகே தண்டவாளம் ஓரம் ஒரு ஆசாமி உட்கார்ந்திருந்தை தனிப்படை போலீசார் கண்டனர். அவர்கள் விரைந்து சென்று பார்த்தபோது பத்மநாபன் அங்கு உட்கார்ந்திருந்தது தெரியவந்தது. அவர் அருகில் மதுபாட்டில்கள் கிடந்தன.

எனவே அவர் போதை மயக்கத்தில் இரவில் அந்த வழியாக வரும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய திட்டமிட்டு இருந்தது அவரிடம் விசாரணை நடத்தியபோது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்று கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட ஹேமா வர்ஷினி, ஸ்ரீஜா ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அதுவந்த பின்னர் தான் 2 பேரும் எப்படி கொலை செய்யப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவரும்.

கைது செய்யப்பட்ட பத்மநாபன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

எனது மனைவியின் உடல்நிலை சரியில்லை. கடன் பிரச்சினையில் சிக்கி இருக்கும் எனக்கு மனைவியால் எந்தவித உதவியும் இல்லை. எதிர்காலத்தில் இரண்டு பெண் குழந்தைகளை எப்படி கரைசேர்க்க போகிறோம் என்று அடிக்கடி நான் கவலைப்பட்டது உண்டு. எனவே கடன் பிரச்சினையில் சிக்கி இருக்கும் நான் மனைவி குழந்தைகளை காப்பாற்ற முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். அதனால் மனைவியை யும், குழந்தைகளையும் கொன்று விட வேண்டும் என்று தீர்மானித்தேன். ஆனால் மனைவியை அவரது சகோதரி அழைத்து சென்று விட்டார். எனவே நான் வேறுவழியின்றி பெற்ற குழந்தைகளையே கொன்று விட்டேன்.

இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story