விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்: கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது; துணை சபாநாயகர் பேச்சு
விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். வெள்ளாடுகள் வழங்கும் விழா
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே உள்ள சி.கோபாலபுரம் கிராமத்தில் தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் ஆர்.ஏ.சக்திவேல் தலைமை தாங்கினார். மகேந்திரன் எம்.பி முன்னிலை வகிததார். விழாவில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு 106 ஏழைப்பெண்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள், கொட்டகை அமைக்க தலா ரூ.2 ஆயிரத்திற்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:–
இத்திட்டத்தில் ஒரு பயனாளிக்கு 4 வெள்ளாடுகளுக்கு ரூ.10 ஆயிரம், கொட்டகை அமைக்க ரூ. 2 ஆயிரம், போக்குவரத்து செலவு ரூ. 150, பயிற்சி செலவு ரூ.300, இதர செலவு ரூ.300 சேர்த்து ரூ.12 ஆயிரத்து 750 செலவிடப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டமாக உள்ளது. இதன் மூலம் அவர் சமூக பொருளாதார விஞ்ஞானியாக திகழ்ந்து சமுதாய புரட்சியை ஏற்படுத்தி உள்ளார்.
அவர் நம்மிடம் இல்லாவிட்டாலும், அவரது திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். 2011–ம் ஆண்டிற்கு முன்பு தி.மு.க.ஆட்சியில் மின்வெட்டு காரணமாக தமிழகம் இருண்டு காணப்பட்டது. தற்போது 100 யூனிட் வரை மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தி.மு.க.ஆட்சியில் புயலே வீசாதது போல அரசு மீது குற்றம் சாட்டுகின்றனர். அதற்கெல்லாம் கவலைப்படாமல் ஏழை மக்களுக்காக உழைப்பதையே எங்கள் லட்சியமாகக் கொண்டுசெயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கால்நடை பராமரிப்புத் துறை கோவை மண்டல இணை இயக்குனர் புருஷோத்தமன், பொள்ளாச்சி கோட்ட உதவி இயக்குனர் முருகேசன், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகள் விவேகானந்தன், கே.பாக்கிய லட்சுமி, அ.தி.மு.க பிரமுகர்கள் மோகனசுந்தரம், கோவிந்தனூர் காளிமுத்து, மகாலிங்கம், செந்தில் குமார்உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கொங்க நாட்டான் புதூரில் பொள்ளாச்சி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 4 லட்சத்தில் மினி குடோன், நபார்டு வங்கி திட்டத்தில் ரூ.39.79 லட்சம் செலவில் கருமாண்ட கவுண்டனூரில் இருந்து, மணியாச்சிகோவில் வரை தார்சாலை பணிகளுக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது. இதில் மகேந்திரன், எம்.பி, மேற்குஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்ஆர்.ஏ.சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.