நன்னிலம் அருகே கோவிலில் திருட்டுப்போன மேலும் ஒரு சாமி சிலை மீட்பு வாலிபர் கைது


நன்னிலம் அருகே கோவிலில் திருட்டுப்போன மேலும் ஒரு சாமி சிலை மீட்பு வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 Dec 2018 4:00 AM IST (Updated: 9 Dec 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் அருகே கோவிலில் திருட்டுப்போன மேலும் ஒரு சாமி சிலை மீட்கப்பட்டது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே சிதலபதி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த ஆண்டு 5 உலோக சிலைகள் திருட்டு போனது. இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கூத்தனூர் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் இருந்து சின்னான், விநாயகர் ஆகிய 2 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவை சிதலபதி கோவிலில் இருந்து திருட்டுப்போன சிலைகள் என தெரியவந்தது.

இந்தநிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் சிறுபுலியூரை சேர்ந்த அகிலன் (வயது 21) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் சிதலபதி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்த 2 சாமி சிலைகளை திருடி கூத்தனூரில் உள்ள குளத்தில் புதைத்து வைத்திருந்ததும், மேலும் 2 சிலைகளை அருகே உள்ள ஒரு பகுதியில் புதைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார், அகிலனை அவர் கூறிய இடத்தில் தோண்டி பார்த்தனர். அப்போது அந்த குழியில் இருந்த ஆரியமாலா, கருப்பழகி ஆகிய 2 சாமிசிலைகளை மீட்டனர். மேலும் காத்தவராயன் சிலையை தேடி வந்தனர்.

அகிலன், போலீசாரிடம் காத்தவராயன் சிலையை பேரளம் அருகே உள்ள பில்லூர் கிராமத்தில் ஒரு வாய்க்காலில் புதைத்து வைத்திருப்பதாக கூறினான். இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த வாய்க்காலில் பள்ளம் தோண்டி பார்த்த போது காத்தவராயன் சிலை இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த சிலையை போலீசார் மீட்டனர்.

மீட்கப்பட்ட காத்தவராயன் சிலையின் வலது கை உடைந்த நிலையில் காணப்பட்டது. திருடப்பட்ட சிலையை புதைக்கும்போது அதன் கை உடைந்திருக்கலாம் என தெரிகிறது.

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அகிலனை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிலரை தேடிவருகின்றனர்.

கைது செய்யப்பட்ட அகிலன் கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் கைப்பற்றப்பட்ட சிலைகளும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. அகிலனை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டார்.

Next Story