மாவட்ட செய்திகள்

பவானிசாகர் வனச்சரகத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பழங்குடியினர் அருங்காட்சியகம்; அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல் + "||" + Tribal Museum in Bhavani Sagar Forest Reserve

பவானிசாகர் வனச்சரகத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பழங்குடியினர் அருங்காட்சியகம்; அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்

பவானிசாகர் வனச்சரகத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பழங்குடியினர் அருங்காட்சியகம்; அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
பவானிசாகர் வனச்சரகத்தில் ரூ.7கோடி மதிப்பீட்டில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனத்துறை சார்பில் பண்ணாரி புலிகள் விழிப்புணர்வு மையம் திறப்பு விழா மற்றும் பழங்குடியினர் அருங்காட்சியகம், சூழல் கலாச்சார கிராமத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு, புலிகள் விழிப்புணர்வு மையத்தை திறந்து வைத்தனர். பின்னர் பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் சூழல் கலாச்சார கிராமத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:–

சத்தியமங்கலம் வனக்கோட்டமானது பல்வேறு வகையான தாவரம் மற்றும் வன விலங்குகளுடன் 1,455 சதுர கி.மீ. பரப்புடையதாகும். அ.தி.மு.க. அரசு வன விலங்குகளை பாதுகாப்பதிலும் பழங்குடியின மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

பண்ணாரி அம்மன் கோவிலுக்கு அருகே 15 எக்டேர் பரப்பளவில் புலிகள் விழிப்புணர்வு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையம் வனப்பகுதியில் உள்ள புலிகள் மற்றும் இதர வன விலங்குகள், தாவரங்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்களிப்பை மற்றும் பங்கேற்பை நல்குவதற்காக திறக்கப்பட்டுள்ளது. 15 எக்டேர் பரப்பளவில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது.

பவானிசாகர் வனச்சரகத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் மற்றும் சூழல் கலாசார கிராமம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் பவானிசாகர் வனச்சரகம், காராச்சிக்கொரை பகுதியில் சுமார் 20 எக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.

இங்கு பழங்குடியின மக்கள் வனம் மற்றும் வனவிலங்குகளுடன் ஒன்றிணைந்து வாழும் முறை, வாழ்விடங்கள், வாழ்க்கை முறைகள், கலாசார பாரம்பரிய முறைகள், பயன்பாட்டு பொருட்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. இவைகளை இந்த அருங்காட்சியகத்தில் கண்டுகளிப்பதன் மூலம் பல்வேறு தரப்பட்ட மக்களும் வனம் மற்றும் வனவிலங்குகளுடன் இணைந்து வாழ வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்களின் கலாசாரம் மற்றும் சூழல் நட்பு வாழ்க்கையை காட்சிப்படுத்துதல், பழங்குடியின மக்களின் விவசாய முறைகள், உணவு பழக்க வழக்கங்கள், மருத்துவ வழிமுறைகள், இசைக்கருவிகள் ஆகியவற்றை காட்சிப்படுத்துதல், பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை, கலாசார பண்பாடு பற்றி கண்டறிந்து அவைகளை வளமைப்படுத்துதல், தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியை பெரிய அளவில் ஏற்படுத்துதல் உள்ளிட்டவை இதன் நோக்கமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.