நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தூத்துக்குடி சப்-இன்ஸ்பெக்டரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் போலீஸ் சூப்பிரண்டுக்கு, நீதிபதி உத்தரவு


நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தூத்துக்குடி சப்-இன்ஸ்பெக்டரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் போலீஸ் சூப்பிரண்டுக்கு, நீதிபதி உத்தரவு
x
தினத்தந்தி 8 Dec 2018 9:30 PM GMT (Updated: 8 Dec 2018 7:50 PM GMT)

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தூத்துக்குடி சப்-இன்ஸ்பெக் டரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

நெல்லை, 

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தூத்துக்குடி சப்-இன்ஸ்பெக் டரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மனைவிக்கு ஜீவனாம்சம்

நெல்லை மேலப்பாளையம் ஜமாலியா தைக்கா தெருவை சேர்ந்தவர் முகமது சாகி மகள் முகமது பாத்திமா. இவருக்கும், தூத்துக்குடியை சேர்ந்த சேக் முகமது உசேன் என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி கடந்த 2016-ம் ஆண்டு நெல்லை குடும்ப நல கோர்ட்டு மூலம் விவாகரத்து பெற்றனர்.

மனைவிக்கு மாதம் ரூ.5 ஆயிரமும், குழந்தைக்கு மாதம் ரூ.2 ஆயிரத்து 500-ம், வீட்டு வாடகைக்கு ரூ.2 ஆயிரமும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று சேக் முகமது உசேனுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அவர் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக முகமது பாத்திமா குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இந்த வழக்கில் சேக் முகமது உசேனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அவர் சேக் முகமது உசேனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவில்லை. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்பிறகும் அவர் ஆஜராகவில்லை. கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத சப்-இன்ஸ்பெக்டர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டரை ஆஜர்படுத்த...

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாணைக்கு வந்தது. அப்போது சேக் முகமது உசேனை தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அடுத்த மாதம் (ஜனவரி) 5-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி சந்திரா உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் முகமது பாத்திமா சார்பில் வக்கீல் ஜாபர் அலி ஆஜராகி வாதாடினார்.

Next Story