உரிய ஆவணங்கள் இன்றி மினி லாரிகளில் எடுத்து சென்ற 12 டன் வெல்லம் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை


உரிய ஆவணங்கள் இன்றி மினி லாரிகளில் எடுத்து சென்ற 12 டன் வெல்லம் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 9 Dec 2018 5:00 AM IST (Updated: 9 Dec 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

உரிய ஆவணங்கள் இன்றி மினி லாரிகளில் எடுத்து சென்ற 12 டன் வெல்லத்தை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஓமலூர், 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மேச்சேரி பிரிவு ரோட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வெல்லம் லோடு ஏற்றிக்கொண்டு 3 மினி லாரிகள் வந்தன. அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் இந்த மினி லாரிகளை நிறுத்தி தணிக்கை செய்தனர்.

அப்போது அதிகாரிகள் லாரிகளில் வெல்லம் பேக்கிங் செய்யப்பட்டிருந்ததை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில், வெல்லம் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு துறையின் முத்திரை இல்லாதது மற்றும் உரிய அனுமதி, ஆவணங்கள் எதுவும் இல்லாமல் மினி லாரிகளில் வெல்லம் ஏற்றி வந்தது தெரியவந்தது.

மேலும் இந்த லோடு ஓமலூர் பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலையில் இருந்து ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதிக்கு கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து மினி லாரிகளை ஓட்டி வந்த டிரைவர்களிடம் அதிகாரிகள் கேட்டபோது, அவர்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது, ஆலை உரிமையாளர்கள் மினி லாரிகளை ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதிக்கு ஓட்டி செல்லுமாறு கூறினார்கள். அதன்படி நாங்கள் லாரிகளை ஓட்டி வந்தோம் என்றனர்.

இதைத்தொடர்ந்து 3 மினி லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்கள் சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு கொண்டு சென்று நிறுத்தி வைக்கப்பட்டன. இதேபோல் கொங்கணாபுரம் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதி இல்லாமல் வெல்லம் ஏற்றி சென்ற மினி லாரி ஒன்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த மினி லாரி கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் கூறியதாவது:-

‘அனுமதி இல்லாமல் 4 மினி லாரிகளில் வெல்லம் எடுத்து செல்வது வாகன தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் சுமார் 12 டன் வெல்லம் இருக்கலாம். இந்த வெல்லத்தில் கலப்படம் ஏதும் செய்யப்பட்டு உள்ளதா? என்பது குறித்து கண்டறிய வெல்லத்தை எடுத்து பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட ஆலை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் பேரில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடத்தி நட வடிக்கை எடுக்கப்படும்.’

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story