பெரம்பலூர், அரியலூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 2,941 வழக்குகளுக்கு தீர்வு


பெரம்பலூர், அரியலூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 2,941 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 8 Dec 2018 10:45 PM GMT (Updated: 8 Dec 2018 8:05 PM GMT)

பெரம்பலூர், அரியலூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 2,941 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்,

உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி பாலராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த், தலைமை நீதித்துறை நடுவர் முரளிதரன், சார்பு நீதிபதி ஸ்ரீரிஜா, மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவின் செயலாளரும் மற்றும் சார்பு நீதிபதியுமான வினோதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, நீதித்துறை நடுவர் அசோக் பிரசாத், கூடுதல் மகிளா நீதிமன்ற நீதித்துறை நடுவர் மோகனப்பிரியா மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆகியோர் கொண்ட அமர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளையும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நிலுவையில் உள்ள வாரா கடன் வழக்குகளையும் விசாரித்து தீர்வு வழங்கியது.

இதில் 66 வங்கி வழக்குகளில் ரூ.53 லட்சத்து 62 ஆயிரத்து 650-க்கும், 62 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ.1 கோடியே 9 லட்சத்து 24 ஆயிரத்து 813-க்கும் தீர்வு காணப்பட்டது. 14 சிவில் வழக்குகளில் ரூ.80 லட்சத்து 80 ஆயிரத்து 375-ம் உள்ளிட்ட மொத்தம் 1,892 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 75 லட்சத்து 37 ஆயிரத்து 989-க்கு தீர்வு காணப்பட்டது. தீர்வு பெறப்பட்ட வழக்கின், வழக்குதாரருக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி பாலராஜமாணிக்கம் நஷ்ட ஈடு தொகைக்கான காசோலையை வழங்கினார்.

இதில் வக்கீல் சங்க தலைவர் வள்ளுவன்நம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளை உள்ளடக்கிய நீதிமன்றங்களில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் மொத்தம் 1,049 வழக்குகளில் ரூ.2 கோடியே 35 லட்சத்து 39 ஆயிரத்து 558-க்கு தீர்வு காணப்பட்டது. முன்னதாக அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுமதி உத்தரவின் பேரில், அரியலூரில் மொத்தம் 4 சிறப்பு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு தீர்வுகள் வழங்கப்பட்டன. இதில் அரியலூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஜெயக்குமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சஞ்சீவி பாஸ்கர், சார்பு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவின் செயலாளருமான சரவணன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கார்த்திகேயன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மாணிக்கம், குற்றவியல் நடுவர் மகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற அமர்வில் சார்பு நீதிபதி புஷ்பராணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் வட்ட சட்ட பணி ஆணைக் குழுவின் தலைவர் பாரதிராஜா நீதித்துறை நடுவர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Next Story