மாவட்ட செய்திகள்

ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம் + "||" + At least two of the same number, PAN card

ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்

ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்
மிக அதிசயமாக 2 பேரின் பெயர், பெற்றோர்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியும் ஒன்றாக இருப்பதால், ஒரே எண்ணில் இருவருக்கும் பான்கார்டு வழங்கப்பட்டுள்ளது. கடன் வாங்க சென்ற போது தான் இது குறித்த குளறுபடி வெளிவந்துள்ளது.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வெற்றியூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 52). இவர் சிவகங்கை வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது வீடு காரைக்குடி போலீஸ் காலனியில் உள்ளது. இவர் கடந்த 2008–ம் ஆண்டு வருமான வரித்துறை மூலம் பான் கார்டு பெற்றுள்ளார். அதன் எண் CCOPS0932F. இந்த எண்ணையே தனது வங்கி கணக்குகளுடன் இணைத்து உள்ளார்.

இந்த நிலையில் சேகர், வீடு கட்டுவதற்கு திட்டமிட்டு அங்குள்ள வங்கியில் வீட்டுக்கடன் கேட்டு விண்ணப்பித்தார். அதனை ஆய்வு செய்த வங்கி மேலாளர், ‘‘பல இடங்களில் நீங்கள் கடன் வாங்கி நிலுவை வைத்து இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு கடன் தர இயலாது‘‘ என மறுத்துவிட்டார். ஆனால் சேகர், ‘‘நான் எங்கும் இதுவரை கடன் வாங்க வில்லை‘‘ என்று மறுத்துள்ளார்.

உடனே வங்கி மேலாளர், அதற்கு ஆதாரமாக சிபில் (ஒருவரின் கடன் பற்றிய தகவல்கள்) அறிக்கையை கொடுத்துள்ளார். அதில் சேகர் காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் வங்கி ஒன்றில் கடன் வாங்கி நிலுவை வைத்திருப்பதாக தகவல் இருந்தது. உடனே சேகர், ஏனாத்தூரில் உள்ள வங்கிக்கு நேரிடையாக சென்று மேலாளரிடம், ‘‘நான் உங்கள் வங்கியில் கடன் வாங்கவே இல்லை. ஆனால் எனது பெயரில் உங்களது வங்கியில் எப்படி கடன் நிலுவை உள்ளது‘‘ என்று கேட்டு உள்ளார்.

அதன் அடிப்படையில் வங்கி மேலாளர் இதுகுறித்து ஆய்வு செய்தார். அப்போது அந்த வங்கியில் கடன் வாங்கி நிலுவை வைத்திருப்பது ஏனாத்தூர் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் சேகர் என்ற காண்டிராக்டர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் வங்கிக்கு வழங்கிய பான்கார்டு எண்ணும், சப்–இன்ஸ்பெக்டர் சேகர் பான்கார்டு நம்பரும் ஒன்றாக இருப்பது தெரியவந்தது. இருவருக்கும் ஒரே எண்ணில் பான்கார்டு இருந்ததால் தான் காண்டிராக்டர் சேகர் வாங்கிய கடன், சப்–இன்ஸ்பெக்டர் சேகரின் சிபில் அறிக்கையில் எதிரொலித்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரே எண்ணில் இருவருக்கும் எப்படி பான்கார்டு வழங்கியது என்பது குறித்து நடந்த மேல் விசாரணையில் பல அதியசங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது காண்டிராக்டர் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர் ஆகிய இருவரின் பெயரும் சேகர் என்பது தான். அடுத்ததாக இவர்கள் இருவரும் ஒரே தேதியில் பிறந்துள்ளனர். இவர்கள் பிறந்த தேதி 17–05–1966. அதன் தொடர்ச்சியாக இருவரின் பெற்றோர் பெயரும் ஒன்றே. இருவரின் தந்தை பெயரும் சுப்பிரமணியன். தாய் பெயர் சரோஜா.

இந்த காரணங்களால் தான் இரண்டு பேருக்கும் ஒரே எண்ணில் வருமான வரித்துறை பான்கார்டு வழங்கி உள்ளது. வருமான வரித்துறை செய்த இந்த குளறுபடி குறித்து சப்–இன்ஸ்பெக்டர் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. அதன்காரணமாக அவர் வங்கி கடன் கேட்டு விண்ணப்பித்த மனுவும் நிலுவையில் உள்ளது.

வங்கி கடன் உடனே வேண்டுமென்றால், இந்த பான் கார்டு எண்ணில் உள்ள கடன் தொகையை செலுத்தி விட்டால் உங்களுக்கு கடன் தருகிறோம் என்று வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். காண்டிராக்டர் வாங்கிய கடனுக்கு நான் ஏன் பணம் செலுத்த வேண்டும் என்று சப்–இன்ஸ்பெக்டர் எதிர் கேள்வி கேட்கிறார். அவரது கேள்வி நியாயம் இருக்கிறது. ஆனால் வருமான வரித்துறை தனக்கு புதிய பான்கார்டு வழங்கும் என்று சப்–இன்ஸ்பெக்டர் சேகர் காத்திருக்கிறார்.


அதிகம் வாசிக்கப்பட்டவை