வாடகை கொடுப்பதில் தகராறு ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேர் கைது
ராமநாதபுரத்தில் வாடகை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் வசந்தவேணி நாச்சியார் தெருவை சேர்ந்த கருப்பையா என்பவருடைய மகன் செல்வராஜ்(வயது62). ஆட்டோ டிரைவரான இவரிடம் 3 பேர் மதுக்கடைக்கு செல்லவேண்டும் என்று சவாரி அழைத்து சென்றுள்ளனர். பின்னர் டாஸ்மாக் மதுக்கடையில் மது அருந்திவிட்டு மேலும் பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர். முடிவில் வாடகை கொடுக்கும்போது கூடுதலாக சென்ற இடங்களுக்கு வாடகை தரும்படி செல்வராஜ் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து அவரை தாக்கியதுடன் ஆட்டோவை சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த செல்வராஜ் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜீவரெத்தினம் வழக்குப்பதிவு செய்து பசும்பொன் நகரை சேர்ந்த முருகேசன் மகன் பிரகாஷ்(24), எம்.எஸ்.கே.நகரை சேர்ந்த முனியசாமி மகன் ராஜ்குமார் என்ற கொக்கிகுமார்(26) ஆகியோரை கைது செய்தனர். கொக்கிகுமார் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக உள்ள மேலும் ஒரு வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.