கழிவுநீர் கலப்பதாக வழக்கு வைகை ஆற்றில் வக்கீல்கள் குழு நேரில் ஆய்வு


கழிவுநீர் கலப்பதாக வழக்கு வைகை ஆற்றில் வக்கீல்கள் குழு நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 9 Dec 2018 4:30 AM IST (Updated: 9 Dec 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் வக்கீல்கள் குழுவினர் பரமக்குடியில் நேரில் ஆய்வு செய்தனர்.

பரமக்குடி,

மதுரை முதல் ராமநாதபுரம் வரை வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் ஆறு மாசுபடுகிறது. மேலும் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை ஆறு மாசுபட்டு வருவதால் அதனை பாதுகாக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த வக்கீல் அருண்நிதி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மதுரை முதல் ராமநாதபுரம் வரையிலான வைகை ஆற்றை பார்வையிட்டு அறிக்கை தரவேண்டும் என்று நீதிமன்ற நடுநிலை அறிவுரையாளராக மூத்த வக்கீல் வீரகதிரவன் என்பவரை நியமனம் செய்தார்.

இதன்படி அவரது ஆலோசனையின் பேரில் மதுரை ஐகோர்ட்டு வக்கீல்கள் ஜெகநாதன், பிரசன்னா, சுசய் கிருஷ்ணா, ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய வக்கீல்கள் குழு பரமக்குடி வைகை ஆறு, பொதுப்பணி துறை கால்வாய்கள், வைகை ஆற்றை ஒட்டியுள்ள குளங்கள், கண்மாய்கள் ஆகியவற்றை பார்வையிட்டது. மேலும் எந்த பகுதிகளில் இருந்து கழிவுநீர் வைகை ஆற்றில் வந்து கலக்கிறது என்பதையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து அவர்கள் நிருபர்களிடம் கூறும்போது, இந்த வழக்கு சம்பந்தமாக பார்வையிட்டு ஆய்வு அறிக்கை வருகிற 20–ந் தேதி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் சமர்பிப்போம். அதனை தொடர்ந்து நீதிபதி அறிவுரையின் பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது பரமக்குடி தாசில்தார் பரமசிவன், ஆணையாளர் (பொறுப்பு) வரதராஜன், பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் சீனிவாசன், நகரமைப்பு சீரமைப்பு ஆய்வாளர் சரோஜா ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story