டிரைவருக்கு கடன் கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம்: சேலம் கூட்டுறவு சங்க செயலாளர் உள்பட 2 பேர் கைது
சேலத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கடன் பெற ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற சங்க செயலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள எஸ்.பி.பி. காலனியை சேர்ந்தவர் நணிக்கவுண்டன் (வயது 46), அரசு பஸ் டிரைவர். இவர் சேலத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் ரூ.3 லட்சம் கடன் கேட்டு கடந்த 14 மாதத்திற்கு முன்பு விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு கடன் கிடைக்கவில்லை.
அவருக்கு பின்னால் விண்ணப்பித்த சிலருக்கு கடன் வழங்கப்பட்டு உள்ளதை அறிந்த அவர் கூட்டுறவு சங்க செயலாளர் மனோகரனை தொடர்பு கொண்டார். அதற்கு அவர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்காமல் தொழிற்சங்க நிர்வாகிகளை அணுகுமாறு கூறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் அண்ணா தொழிற்சங்க பேரவை திருச்செங்கோடு கிளை செயலாளரும், கண்டக்டருமான வேலுச்சாமியை (55) தொடர்பு கொண்டார். அப்போது அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத நணிக்கவுண்டன், இது குறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார்.
போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களுடன் திருச்செங்கோடு சென்ற நணிக்கவுண்டன், வேலுச்சாமியை தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது அவர் ராஜகோபால் என்பவரிடம் பணத்தை கொடுக்கும்படி கூறியுள்ளார். அதன்பேரில் லஞ்ச பணத்தை, நணிக்கவுண்டன், ராஜகோபாலிடம் நேற்று மதியம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெய்குமார் தலைமையில் போலீசார், ராஜகோபாலை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் கண்டக்டர் வேலுச்சாமியை திருச்செங்கோட்டில் கைது செய்தனர். கூட்டுறவு சங்க செயலாளர் மனோகரனை (54) சேலத்தில் கைது செய்தனர். பின்னர் சேலத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க அலுவலகத்தில் உள்ள கோப்புகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது அரசு கணக்கில் ரூ.64 ஆயிரத்து 324 குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. எனவே இந்த பணமும் கையாடல் செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story