பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது பிரச்சினைகளை எழுப்ப பா.ஜனதா தயாராகிறது


பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது பிரச்சினைகளை எழுப்ப பா.ஜனதா தயாராகிறது
x
தினத்தந்தி 9 Dec 2018 5:00 AM IST (Updated: 9 Dec 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பெலகாவியில் குளிர்கால கூட்டத் தொடருக்காக கர்நாடக சட்டசபை நாளை(திங்கட்கிழமை) கூடுகிறது.

பெங்களூரு, 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பெலகாவியில் குளிர்கால கூட்டத் தொடருக்காக கர்நாடக சட்டசபை நாளை(திங்கட்கிழமை) கூடுகிறது. இதில் வறட்சி நிவாரணம்-விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப பா.ஜனதா தயாராகி வருகிறது.

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

விவசாய கடன் தள்ளுபடி

குமாரசாமி முதல்-மந்திரியாக பணியாற்றி வருகிறார். ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால் ஆட்சி அமைந்து 6 மாதங்கள் ஆகியும் இன்னும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. ரூ.45 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி அறிவித் துள்ளார். அந்த அறிவிப்பு இன்னும் அறிவிப்பாகவே உள்ளது. அந்த திட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை.

காலவரையற்ற போராட்டம்

இந்த கூட்டணி ஆட்சியை கண்டித்து பல்வேறு விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தின. விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், கரும்பு நிலுவைத்ெதாகையை வழங்க வேண்டும், கடனை திரும்ப செலுத்தும்படி வங்கிகள் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய கோரி விவசாயிகள் பெலகாவியில் காலவரையற்ற போராட்டம் நடத்தினர்.

அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டதை அடுத்து விவசாயிகள் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர். இந்த நிலையில் பல்வேறு விவசாய சங்கங்கள், பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவுக்கு வெளியே பெரிய அளவில் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றன.

சட்டசபை நாளை கூடுகிறது

இன்னொரு புறம், மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் இந்த சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை நாளை(திங்கட்கிழமை) பெலகாவி சுவர்ண சவுதாவில் கூடுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த சட்டசபையின் குளிர்கால கூட்டத்திற்காக ஒட்டு ெமாத்த அரசு எந்திரமும் பெலகாவிக்கு மாற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

புயலை கிளப்ப பா.ஜ.க. தயாராகிறது

இந்த கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா, மிக முக்கியமாக விவசாய கடன் தள்ளுபடி செய்யாமல் இருப்பது, கரும்பு நிலுவைத்தொகையை பட்டுவாடா செய்யாமல் இருப்பது, 100 தாலுகாக்களில் நிலவி வரும் வறட்சி உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி, அதன் மூலம் புயலை கிளப்ப தயாராகி வருகிறது.

எதிர்க்கட்சி எழுப்பும் பிரச்சினைகளை எதிர்கொள்ள கர்நாடக அரசு தேவையான வியூகங்களை வகுத்துள்ளது. கடந்த 6 மாதங்களில் என்னென்ன திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து புள்ளி விவரங்களுடன் பதிலளிக்க மந்திரிகள் தயாராகியுள்ளனர்.

தங்கும் வசதிகள்

முதல்-மந்திரி, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் ஆகியோருக்கு தங்கும் வசதிகள் பெலகாவி மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த முறை அவர்களுக்கு உணவு அங்கேயே தயாரித்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மைசூரு மண்டலம், கடலோர மண்டலம் மற்றும் வட கர்நாடக மண்டல உணவுகளை சமைத்து வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தந்த மண்டலத்தில் இருந்து சமையல் நிபுணர்கள் பெலகாவிக்கு செல்கிறார்கள்.

போலீஸ் பாதுகாப்பு

கடந்த ஆண்டு உணவு சரியாக அமையாததால், எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்த முறை அதுபோல் நடை பெறக்கூடாது என்பதற்காக அனைத்து பகுதிகளின் உணவுகளையும் வழங்க சபாநாயகர் ரமேஷ்குமார் முடிவு செய்துள்ளார்.

பெலகாவி சுவர்ண சவுதா போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. சுவர்ண சவுதா கட்டிடத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளா்களுக்கும் தங்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

2 மாநிலங்கள் இடையே...

பெலகாவி மாவட்டம், கர்நாடகம்-மராட்டிய மாநில எல்லையில் அமைந்துள்ளது. பெலகாவி தங்களுக்கு தான் சொந்தம் என்று மராட்டிய மாநிலம் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக 2 மாநிலங்கள் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.

பெலகாவி கர்நாடகத்துக்கே சொந்தம் என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில் ஆண்டுக்கு ஒரு முறை சட்டசபை கூட்டத்தொடர் பெலகாவியில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story