நடப்பு ஆண்டில் ரூ.1.53 கோடி கொடிநாள் நிதி வசூலிக்க இலக்கு கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ.1 கோடியே 53 லட்சம் கொடிநாள் நிதி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படை வீரர்கள் நலத்துறையின் சார்பில் கொடிநாள் விழா மற்றும் தேநீர் விருந்து நிகழ்ச்சி கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது. இவ்விழாவில் கொடிநாள் வசூலை தொடங்கி வைத்து கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
கடந்த ஆண்டு நமது மாவட்டத்திற்கு ரூ.1 கோடியே 39 லட்சத்து 81 ஆயிரத்து 600 கொடிநாள் நிதியாக வசூல் செய்ய நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் நாம் ரூ.1 கோடியே 54 லட்சத்து 31 ஆயிரத்து 100 வசூல் செய்து சாதனை புரிந்து உள்ளோம். இச்சீரிய பணியில் ஈடுபட்டு, சிறப்புற பணியாற்றிய அனைத்து துறை அலுவலர்களையும் பாராட்டுவதோடு, எனது நன்றியினையும் தெரிவித்து கொள்கிறேன்.
நடப்பு ஆண்டிற்கு (2018) நாமக்கல் மாவட்டத்திற்கு கொடிநாள் நிதி வசூல் குறியீடாக ரூ.1 கோடியே 53 லட்சத்து 79 ஆயிரத்து 800 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வழக்கம்போல இதற்கு அதிகமாக வசூல் செய்திட அனைத்து துறை அலுவலர்களையும் கேட்டுக் கொள்கிறேன். இக்கொடிநாள் மூலம் வசூல் செய்யப்படும் நிதி, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோரின் பல்வேறு நலத்திட்டங்களுக்காக செலவிடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக விழாவில் முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளையும், முன்னாள் படைவீரர்களுக்கு கண் கண்ணாடி நிதிஉதவியாக ரூ.9 ஆயிரத்துக்கான காசோலைகளையும், கல்வி உதவித்தொகையாக 5 நபர்களுக்கு ரூ.57 ஆயிரத்து 300-க்கான காசோலைகளையும், 2017-ம் ஆண்டில் 100 சதவீதம் கொடி நாள் வசூல் புரிந்தமைக்காக அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் டாக்டர் காஞ்சனா. முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கர்னல் (ஓய்வு) பழனியப்பன், நாமக்கல் மாவட்ட முப்படை வாரிய துணைதலைவர் ராமசாமி உள்பட முன்னாள் படைவீரர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story