தர்மபுரியில் நள்ளிரவில் ஆஞ்சநேயர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு முகமூடி கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு


தர்மபுரியில் நள்ளிரவில் ஆஞ்சநேயர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு முகமூடி கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Dec 2018 11:00 PM GMT (Updated: 8 Dec 2018 8:50 PM GMT)

தர்மபுரியில் நள்ளிரவில் ஆஞ்சநேயர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தர்மபுரி,

தர்மபுரி எஸ்.வி.ரோட்டில் பிரசித்தி பெற்ற அபய ஆஞ்சநேயர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் தர்மபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த கோவில் அருகே நிலஅபகரிப்பு தனிப்பிரிவு போலீஸ் நிலையம், ஊர்க்காவல்படை அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், தாலுகா அலுவலகம், கிளை சிறைச்சாலை மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்த பகுதியில் எப்போதும் அதிக பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் அர்ச்சகர் வாசுதேவன் இரவு நேர பூஜைகளை முடித்து கொண்டு வழக்கம்போல் கோவிலை பூட்டி சென்றார். நேற்று அதிகாலை அவர் கோவிலுக்கு வந்தார்.அப்போது கோவிலின் வெளிப்பகுதியில் இருந்த இரும்பு தகடுகளால் செய்யப்பட்ட உண்டியல் உடைக்கப்பட்டிருந்து. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கோவில் செயல் அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக கோவில் செயல் அலுவலர் அமுதசுரபி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கோவில் வளாகத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது உண்டியலில் இருந்த பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. உண்டியலில் சுமார் ரூ.1 லட்சத்திற்கு மேல் காணிக்கை பணம் இருந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. நள்ளிரவில் முகமூடியுடன் வந்த கொள்ளையர்கள் கோவில் வளாகத்தில் வெளிப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை வேறு திசைக்கு திருப்பி வைத்து உள்ளனர். பின்னர் அங்கு இருந்த மின் விளக்குகளின் மின்சார இணைப்பை துண்டித்துவிட்டு இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த டவுன் போலீசார் கண் காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்பதை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆஞ்சநேயர் கோவில் உண்டியலை உடைத்து நடந்த திருட்டு சம்பவம் பக்தர்கள், பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story