நிலக்கோட்டையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


நிலக்கோட்டையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 8 Dec 2018 10:30 PM GMT (Updated: 8 Dec 2018 9:52 PM GMT)

நிலக்கோட்டை பேரூராட்சியில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை பேரூராட்சியில் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகத்துக்கு மனுக்கள் வந்தன. மேலும் இது தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைசாமி தலைமையிலான அதிகாரிகள் நேற்று 1 மற்றும் 3-வது வார்டுகளுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர். மேலும் பாதுகாப்புக்காக இன்ஸ்பெக்டர்கள் சங்கரேஸ்வரன், கலைவாணி மற்றும் ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

இதையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள், கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் பேரூராட்சி அதிகாரிகள் அகற்றினர். அப்போது சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். உடனே போலீசார் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஆக்கிரமிப்புகளை தாமாக அகற்றவில்லை என்றால், இடித்து அகற்றப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story