9,423 தென்னை மரங்களில் ‘நீரா’ பானம் இறக்க உரிமம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்


9,423 தென்னை மரங்களில் ‘நீரா’ பானம் இறக்க உரிமம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்
x
தினத்தந்தி 9 Dec 2018 5:00 AM IST (Updated: 9 Dec 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில், 9 ஆயிரத்து 423 தென்னை மரங்களில் இருந்து ‘நீரா’ பானம் இறக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

தென்னை விவசாயிகளுக்கு ‘நீரா’ பானம் இறக்குவதற்கான உரிமம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வத்தலக்குண்டு அருகே உள்ள எம்.வாடிப்பட்டியில் நேற்று நடந்தது. விழாவுக்கு, கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். உதயகுமார் எம்.பி., பரமசிவம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 9 ஆயிரத்து 423 தென்னை மரங்களில் இருந்து ‘நீரா’ பானம் இறக்குவதற்கான உரிமத்தை விவசாயிகளுக்கு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தென்னை விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான ‘நீரா’ பானத்தை இறக்கவும், அதனை பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு சுமார் ரூ.1,000 மட்டுமே வருமானம் பெற்ற விவசாயிகளுக்கு, தற்போது ரூ.15 ஆயிரம் வரை கிடைக்கும்.

தென்னை வளர்ச்சி வாரியம், தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் சங்கம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தென்னை உற்பத்தியாளர் இணையம் மூலம் மட்டுமே நொதிப்பு எதிர்ப்பு திரவத்தினை பயன்படுத்தி ‘நீரா’ இறக்க அனுமதி அளிக்கப்படும். மேலும், ‘நீரா’விலிருந்து வெல்லம், பாகு, சர்க்கரை, சாக்லேட்டுகள், கூழ், கேக் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய வேளாண்மைத்துறை சார்பில் பயிற்சி வழங்கப்படும்.

இதன்மூலம் தமிழக மக்களுக்கு இயற்கையான ஊட்டச்சத்து மிக்க ‘நீரா’ பானம் கிடைப்பதோடு, சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் தென்னை விவசாயிகள் பயனடைவார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் முதலாவதாக, வத்தலக்குண்டு தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் ‘நீரா’ இறக்க உரிமம் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தில் நிலக்கோட்டை, ஆத்தூர், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த 655 விவசாயிகளுக்கு சொந்தமான 1 லட்சத்து 89 ஆயிரத்து 785 தென்னை மரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 9 ஆயிரத்து 423 மரங்களில் (5 சதவீதம்) ‘நீரா’ இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல சிறப்புகளை கொண்ட ‘நீரா’ பானத்திற்கு தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, 185 விவசாயிகளுக்கு வேளாண்மை, பட்டு வளர்ச்சி, தோட்டக்கலைத்துறை ஆகியவை சார்பில் பட்டுப்புழு வளர்க்க வீரிய மல்பெரி நடவு உள்பட பல்வேறு பணிகளுக்கு ரூ.57 லட்சம் மானிய தொகையை அமைச்சர் வழங்கினார். இந்த விழாவில், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவரும், முன்னாள் மேயருமான மருதராஜ், வேளாண் இணை இயக்குனர் மனோகரன், துணை இயக்குனர் (வேளாண் வணிகத்துறை) சாத்தப்பன், உதவி இயக்குனர் (பட்டு வளர்்ச்சித்துறை) தங்கராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Next Story