ஓட்டேரி ஏரி, பூங்காவை சீரமைக்க ரூ.13 கோடி ஒதுக்கீடு மின் விளக்குகளுடன் கூடிய நடைபாதை அமைக்க முடிவு


ஓட்டேரி ஏரி, பூங்காவை சீரமைக்க ரூ.13 கோடி ஒதுக்கீடு மின் விளக்குகளுடன் கூடிய நடைபாதை அமைக்க முடிவு
x
தினத்தந்தி 10 Dec 2018 4:00 AM IST (Updated: 9 Dec 2018 10:56 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டேரி ஏரி, பூங்காவை சீரமைக்க ரூ.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஏரிக்கரையில் மின் விளக்குகளுடன் கூடிய நடைபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.

வேலூர், 

வேலூர் நகரம், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு வேலூரை சீர்மிகு நகரமாக மாற்ற மேம்பாட்டு பணிகள் மற்றும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலூர் ஓட்டேரி ஏரி மற்றும் பூங்காவை சீரமைத்து, அதன் கரைப்பகுதியில் நடைபாதை அமைத்து பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியம் கூறியதாவது:-

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் நகரில் உள்ள ஓட்டேரி ஏரி மற்றும் பூங்கா ரூ.13 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. மேலும் கரைப்பகுதியை பலப்படுத்தி, நடைபாதை அமைக்கப்பட உள்ளது. மின் விளக்குகளும் அங்கு அமைக்கப்படும். மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை நேர பொழுது போக்கு இடமாக அவை இருக்கும். அருகில் உள்ள பூங்கா பயன்பாடு இன்றி பல ஆண்டுகளாக உள்ளது. இதனையும் நாங்கள் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட உள்ளோம். அங்குள்ள உடைந்த உபகரணங்கள் மாற்றி குழந்தைகளை கவரும் வகையில் அமைக்க உள்ளோம்.

மேலும் வேலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 12 பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு திறக்கப்படும். பல பூங்காக்கள் திறக்கப்பட்டு பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக புகார்கள் வந்துள்ளது. எனவே திறக்கப்படும் பூங்காக்களை அந்தப்பகுதி குடியிருப்போர் சங்கத்தின் மூலம் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் பயன்பாட்டுக்கு வராத பூங்காக்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர மண்டல உதவி கமிஷனர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story