திருவண்ணாமலை அருகே ஓடும் ரெயிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பெண் நடுவழியில் அபாய சங்கிலியை இழுத்து ரெயில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு
மன்னார்குடியில் இருந்து திருப்பதி சென்ற ரெயிலில் ரத்த வெள்ளத்தில் பெண் பிணமாக கிடந்தார். அந்த ரெயிலில் சென்றவர்கள் அபாய சங்கிலியை இழுத்து நடுவழியில் ரெயிலை நிறுத்தியதால் பரபரப்பு ஏறபட்டது.
திருவண்ணாமலை,
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பாமினி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று விழுப்புரத்தை கடந்து திருவண்ணாமலையை நோக்கி வந்து கொண்டிருந்தது. பகல் 11.30 மணி அளவில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் என்ஜினுக்கு அடுத்ததாக உள்ள மாற்றுத்திறனாளிகள் அமரும் பெட்டியில் இருந்தவர்கள் திடீரென அபாய சங்கிலியை இழுத்தனர். இதனால் ரெயில் அந்த இடத்திலேயே நின்றது.
பின்னர் ரெயில் என்ஜின் டிரைவர் மற்றும் கார்டு ஆகியோர் மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்கு சென்று பார்வையிட்டனர். அந்த பெட்டியில் மாற்றுத்திறனாளிகள் அல்லாதவர்களும் பயணம் செய்ததாக தெரிகிறது.
அப்போது 50 வயது மதிக்கத்தக்க பெண் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மேலும் அந்த பெட்டி முழுவதம் ரத்தக்கறை படிந்து இருந்தது. பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு தயாராக நின்று கொண்டிருந்த திருவண்ணாமலை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அந்த பெண்ணின் தலையில் பலத்த காயமும், கழுத்தில் செயின் இறுக்கப்பட்டதற்கான தடயமும் இருந்துள்ளது. அதைத் தொடர்ந்து போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த பெண்ணை யாராவது கொலை செய்திருக்கலாம் என்றும், கொலையாளி, ரெயிலின் அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தி தப்பி ஓடியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. அந்த பெண்ணை நகைக்காக மர்மநபர்கள் கொன்றனரா? அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளதா என்பது குறித்தும், இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.