திருவண்ணாமலையில் மூக்குப்பொடி சித்தர் மரணம் ஏராளமான பக்தர்கள் அஞ்சலி


திருவண்ணாமலையில் மூக்குப்பொடி சித்தர் மரணம் ஏராளமான பக்தர்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 9 Dec 2018 10:15 PM GMT (Updated: 2018-12-10T00:10:11+05:30)

திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்த மூக்குப்பொடி சித்தர் மரணமடைந்தார். அவரது உடலுக்கு ஏராளமான பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் மூக்குப்பொடி சித்தர் (வயது 94) என்ற சாமியார் கிரிவலப்பாதையில் வசித்து வந்தார். இவர் கடந்த 1982-ம் ஆண்டு முதல் திருவண்ணாமலையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. முதலில் கிரிவலப்பாதையில் உள்ள மரத்தடிகளில் அமர்ந்து இவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக அவரது உடல் நலிவுற்றது. இதனையடுத்து அவர் சேஷாத்திரி ஆசிரமத்தில் தங்கினார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அவர் மரணம் அடைந்தார்.

பின்னர் அவரது உடல் சேஷாத்திரி ஆசிரமத்தில் வைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வந்து உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மூக்குப்பொடி சித்தரின் இயற்பெயர் மொட்டைய கவுண்டர். இவர் மூக்குப்பொடியை விரும்பி பயன்படுத்தியதால் மூக்குப்பொடி சித்தர் என்று அழைக்கப்பட்டார். சேலம் மாவட்டம் விரகனூர் அருகே உள்ள கிழக்கு ராஜபாளையம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். இவரது மனைவி பெயர் சடையம்மாள். இவர், ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு பெரியசாமி என்ற மகன் உள்ளார். மூக்குப்பொடி சித்தர் சாமியாராக ஆன பின்னர் 1975-ம் ஆண்டு திருவண்ணாமலைக்கு வந்து பெங்களூருவுக்கு சென்று உள்ளார்.

பின்னர் அவர் 1982-ம் ஆண்டு திருவண்ணாமலைக்கு வந்தார். பல நாட்கள் உணவு உட்கொள்ளாமல் இருப்பார். திடீரென சாப்பிடத்தொடங்குவார். அவரது அனுமதி இல்லாமல் அவரை யாரும் தரிசிக்க முடியாது. மூக்குப்பொடி சித்தரை டி.டி.வி.தினகரன், புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பலமுறை சந்தித்துள்ளனர்.

மூக்குப்பொடி சித்தரின் உடல் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடல் கிரிவலப்பாதையில் உள்ள வாயு லிங்கம் அருகே அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பின்னர் மாலை 6 மணி அளவில் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

Next Story