ஆவடி அருகே வக்கீலிடம் ரூ.14 லட்சம் மோசடி
ஆவடி அருகே வக்கீலிடம் ரூ.14 லட்சம் கடன் வாங்கிவிட்டு கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்ட மத்திய அரசு ஊழியர் மற்றும் அவரது மனைவி, மகள்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆவடி,
ஆவடியை அடுத்த பட்டாபிராம் அம்பேத்கர் நகர், பெரியார் தெருவை சேர்ந்தவர் புரட்சிதாசன் (வயது 47). வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் பாலசுப்பிரமணியன் என்ற பாலன் (58).
இவர் ஆவடியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான படை உடை தொழிற்சாலையில்(ஓ.சி.எப்) பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மனோரஞ்சிதம். இவர்களது மகள்கள் சுசிலா, பவானி, பிரியா, மோகனா.
மகளின் திருமணம், மருத்துவ செலவு ஆகியவற்றுக்காக கடந்த 2016–ம் ஆண்டு மார்ச் முதல் 2017 செப்டம்பர் வரை பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மகள்கள் சேர்ந்து 7 தவணையாக வக்கீல் புரட்சிதாசனிடன் ரூ.14 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளனர். 6 மாதங்களில் இந்த பணத்தை திருப்பி தருவதாக புரட்சிதாசனிடம் கூறியுள்ளனர்.
ஆனால் அவர்கள் கூறியபடி பணம் திருப்பி கொடுக்கவில்லை. பணத்தை தரும்படி புரட்சிதாசன், பாலசுப்பிரமணியனிடம் பலமுறை கேட்டுள்ளார். பாலசுப்பிரமணியன் பணத்தை கொடுக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்தார். இதுகுறித்து புரட்சிதாசன் பட்டாபிராம் போலீசில் புகார் கொடுத்தார்.
ஆனால் போலீசார் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து புரட்சிதாசன் திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை உரிய முறையில் விசாரிக்காத பட்டாபிராம் போலீசாரை கண்டித்ததுடன், உடனடியாக பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மகள்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து பட்டாபிராம் போலீசார், பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி, மகள்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.