பள்ளிப்பட்டில் கரும்பு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் அவதி
பள்ளிப்பட்டில் கரும்பு ஏற்றி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆந்திரா வங்கி, காஞ்சீபுரம் கூட்டுறவு நிலவள வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேளாண்மை இயக்குனர் அலுவலகம் உள்பட பல அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மேலும் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி, அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளி, 3 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், தாலுகா அரசினர் மேல்நிலை பள்ளி, மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை மற்றும் பல தனியார் மருத்துவமனைகள் இங்கு உள்ளன.
இதனால் பள்ளிப்பட்டு நகரை சுற்றியுள்ள 100–க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமானோர் இங்கு வருகின்றனர்.
பள்ளிப்பட்டு பஸ் நிலையம் மேற்கு பக்கமாக நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தமிழக அரசு போக்குவரத்து பஸ்களுக்கு இணையாக ஆந்திர மாநில அரசு போக்குவரத்து பஸ்களும், 50–க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பல பகுதிகளுக்கு செல்ல பஸ் ஏற இங்கு வந்து செல்கின்றனர். பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 32 சிற்றூராட்சிகள் உள்ளன. இதனால் தங்களது ஊராட்சிகளில் உள்ள குறைகளை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு தெரிவிக்க தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு வந்துசெல்கின்றனர்.
பள்ளிப்பட்டு தாலுகாவில் 72 கிராம ஊராட்சிகளும், 2 பேரூராட்சிகளும் உள்ளன. இந்த பகுதிகளை சேர்ந்தவர்களும் தங்களுக்கு தேவையான சாதிசான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ், நிலபட்டா, வாரிசு சான்றிதழ், வீட்டுமனை பட்டா,அரசின் முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை போன்றவற்றை பெற தினந்தோறும் ஏராளமானோர் இங்கு வருகின்றனர்.
இப்படி பலவகையான காரணங்களால் பள்ளிப்பட்டு நகரம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்குள்ள விவசாயிகள் கரும்பு பயிரிட்டு வருகின்றனர். கரும்பை அறுவடை செய்து லாரி, டிராக்டர்களில் ஏற்றி திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கும் அனுப்பி வருகின்றனர். இவ்வாறாக அனுப்பி வைக்கப்படும் கரும்புகள் வாகனங்களின் தாங்கும் எடைக்கும் அதிகமான பாரத்துடன் ஏற்றப்படுகின்றன.
பல வாகனங்களில் சாலையை அடைத்தபடி கரும்பை ஏற்றி வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
ஆகவே போலீசார் அதிக பாரம் ஏற்றி வரும் கரும்பு வாகனங்களை பகல் நேரத்தில் கட்டுப்படுத்தி ஊருக்கு வெளியே அந்த வாகனங்களை நிறுத்தி இரவு 8 மணிக்கு மேல் அந்த வாகனங்களை நகருக்குள் வர அனுமதிக்க வேண்டும் என பள்ளிப்பட்டு நகர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.