தேவகோட்டை பள்ளிக்குள் புகுந்து அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


தேவகோட்டை பள்ளிக்குள் புகுந்து அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Dec 2018 11:15 PM GMT (Updated: 9 Dec 2018 7:40 PM GMT)

தேவகோட்டையில் உள்ள பள்ளியில் அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் திருடப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவகோட்டை,

தமிழகம் முழுவதும் 10, 11, 12–ம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகின்றன. இதையொட்டி சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா முழுவதும் உள்ள 26 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் நெல்லையில் இருந்து கடந்த 8–ந் தேதி கொண்டுவரப்பட்டன.

இதைத்தொடர்ந்து இந்த வினாத்தாள்கள் அனைத்தும் தேவகோட்டையில் உள்ள என்.எஸ்.எம்.வி.பி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையின் உள்ளே வைக்கப்பட்டு பூட்டப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் பள்ளியின் காவலாளி சண்முகம் பள்ளியின் மெயின் கேட்டை பூட்டிவிட்டு சாப்பிட சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் வந்து விட்டாராம். பின்னர் வழக்கம் போல பணி முடிந்து நேற்று காலை வீட்டுக்கு சென்றுவிட்டார். அதைத்தொடர்ந்து மற்றொரு காவலாளி மணி பணிக்கு வந்தார்.

அவர் தலைமை ஆசிரியர் அறையை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, உள்ளே இருந்த மற்றொரு அறையின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து திடுக்கிட்டார். இது குறித்து தலைமை ஆசிரியர் வெங்கடாசலத்துக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவரும், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் விரைந்து வந்து பார்த்தனர்.

அப்போது மர்ம நபர்கள் அறைக் கதவை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த வினாத்தாள் பண்டல்களை பிரித்து, 10–ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், 11–ம் வகுப்பு தமிழ், பிளஸ்–2 தமிழ், ஆங்கிலம், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடத்திற்கான வினாத்தாள்களை திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இது குறித்து தேவகோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பள்ளியின் இரவு நேர காவலாளி சாப்பிடச் சென்றபோது மர்ம நபர்கள் கள்ளச்சாவி போட்டு மெயின்கேட்டை திறந்து உள்ளே சென்று, தலைமை ஆசிரியர் அறையின் உள்ளே வினாத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கதவை உடைத்து வினாத்தாள்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

சம்பவம் நடந்த பள்ளியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், மாவட்ட கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர். சிவகங்கையிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

வினாத்தாள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் திருடப்பட்டு உள்ளதால் கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


Next Story