மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டுவரும் நிலையில் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசார் பாராமுகமாக உள்ளது ஏன்? இயக்குனர் உரிய அறிவுறுத்தல் வழங்க கோரிக்கை


மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டுவரும் நிலையில் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசார் பாராமுகமாக உள்ளது ஏன்? இயக்குனர் உரிய அறிவுறுத்தல் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 10 Dec 2018 4:15 AM IST (Updated: 10 Dec 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு துறை அலுவலகங்களிலும் அரசு ஆஸ்பத்திரிகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்திவரும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பாராமுகமாக உள்ளதால் துறை இயக்குனர் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் பொதுமக்களிடம் இருந்துவரும் புகார்களின் அடிப்படையிலும் அவர்களது கண்காணிப்பு பணியில் தெரியவரும் முறைகேடுகளை தொடர்ந்தும் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். இந்த அதிரடி சோதனையின் போது பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதோடு கணக்கில் வராத பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 60 அரசு ஆஸ்பத்திரிகளில் கடந்த வாரம் நடத்திய சோதனையின் போது பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு ஆஸ்பத்திரிகளில் சோதனை நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் செயல்பட்டுவந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று சென்ற பின்பு இங்குள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு பணியிடத்திற்கு யாரும் நியமிக்கப்படவில்லை. கடந்த காலங்களில் விருதுநகர் லஞ்ச ஒழிப்புதுறை அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர்கள் பதவி உயர்வு பெற்ற பின்பும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் அதே இடத்தில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அவ்வாறு அனுமதிக்கப்படாத நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டதாலும் வேறு நபர் நியமிக்கப்படாததாலும் இம்மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையின் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு துறை, போக்குவரத்துதுறை, வணிக வரித்துறை, அரசு ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை நடத்திய போது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் பாராமுகமாகவே இருந்துவருகின்றனர். இதனால் இங்குள்ள அரசுத்துறை அலுவலகங்களில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாத நிலை உள்ளதாக எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ள அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் முறையாக கண்காணிக்காததும் அதிரடி சோதனை நடத்த தயக்கம் காட்டுவதுமே துறையினர் பாராமுகமாகவே இருப்பதற்கு காரணம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஒட்டுமொத்தமாக துணை போலீஸ் சூப்பிரண்டு பணியிடம் காலியாக உள்ளதால் இத்துறையினரின் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே மாநில லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு பணியிடத்தை உடனடியாக நிரப்புவதுடன் இத்துறையினர் தொய்வு இல்லாமல் நடவடிக்கை எடுக்க உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.


Next Story