மதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை; 5 மணி நேரம் நடந்தது


மதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை; 5 மணி நேரம் நடந்தது
x
தினத்தந்தி 9 Dec 2018 11:15 PM GMT (Updated: 9 Dec 2018 8:09 PM GMT)

மதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை 5 மணி நேரம் நடந்தது.

மதுரை,

மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதி, தண்டனை கைதி என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த கைதிகளில் சிலர் சிறைக்குள் திருட்டுத்தனமாக கஞ்சா, செல்போன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையில் கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சிறை கைதிகளுக்கு பாடம் கற்பிக்க வந்த ஆசிரியர் செந்தில்குமார்(வயது 31) செல்போன்களை கைதிகளுக்கு விற்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆசிரியர் செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் மதுரை திலகர் திடல் உதவி கமி‌ஷனர் வெற்றிச்செல்வன் தலைமையில், 3 இன்ஸ்பெக்டர்கள், 17 சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் தலைமையில் 180 போலீசார் மத்திய சிறையில் நேற்று சோதனை நடத்தினர். அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை காலை 10 மணிக்கு முடிவடைந்தது. அப்போது, சிறை வளாகம், கழிவறைகள், கைதிகளின் அறைகள், சமையல் கூடம் ஆகியவற்றில் சோதனை நடந்தது.

இதுபோல், அங்குள்ள பெண்கள் சிறையிலும் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து 5 மணி நேரம் மேற்கொண்ட சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் பிடிபடவில்லைஎன்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும், அவர்கள் கூறுகையில், தடைசெய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்துவதாக வந்த தகவலின்பேரில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற திடீர் சோதனைகள் அடிக்கடி நடத்தப்படும் என்றனர்.


Next Story