கிராம நிர்வாக அலுவலர்களை பதவி இறக்கம் செய்ய ஐகோர்ட்டு தடை


கிராம நிர்வாக அலுவலர்களை பதவி இறக்கம் செய்ய ஐகோர்ட்டு தடை
x
தினத்தந்தி 9 Dec 2018 10:45 PM GMT (Updated: 9 Dec 2018 8:09 PM GMT)

கிராம நிர்வாக அலுவலர்களை பதவி இறக்கம் செய்த உத்தரவை அமல்படுத்த தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கீனா, நாகவேணி, செய்யதுஅலிபாத்திமா, சந்திரபிரபா. இவர்கள் கடந்த 2008–ம் ஆண்டில் கிராம நிர்வாக அலுவலர் பணியில் சேர்ந்தனர். இவர்களுக்கு 2013–ம் ஆண்டில் இளநிலை உதவியாளராகவும், 2015–ல் வருவாய் உதவியாளராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இந்தநிலையில் தட்டச்சர்களுக்கு வருவாய் உதவியாளர் பதவி உயர்வு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்தநிலையில் கீனா உள்ளிட்ட 4 பேரின் வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வை ரத்து செய்து வருவாய் நிர்வாக கமி‌ஷனர் உத்தரவிட்டார்.

மேலும், இவர்களின் பணி மூப்பு பட்டியலை சரி செய்து பின்னர் பதவி உயர்வு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவுபடி பணி மூப்பு பட்டியல் சரி செய்யப்படாமல் 4 பேரும் கிராம நிர்வாக அலுவலர்களாக பதவி இறக்கம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து அவர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வக்கீல் கே.பி.கிருஷ்ணதாஸ் ஆஜரானார்.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

தங்களது பதவி உயர்வை ரத்து செய்த வருவாய் நிர்வாக கமி‌ஷனரின் உத்தரவை சீராய்வு செய்யக்கோரி மனுதாரர்கள் மனு கொடுக்கவில்லை. சீராய்வு காலம் முடிந்த பின்பு, மனுதாரர்களை பதவி இறக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருவாய் கமி‌ஷனரின் உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரும் வாய்ப்பை மனுதாரர்கள் பயன்படுத்தவில்லை. இதனால் மனுதாரர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது.

இருப்பினும் மனுதாரர்கள் சீராய்வு மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கப்படுகிறது. மனுதாரர்கள் 15 நாட்களுக்குள் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனு மீது சம்பந்தப்பட்ட அதிகாரி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை மனுதாரர்களை பதவி இறக்கம் செய்த உத்தரவை அமல்படுத்தக்கூடாது.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.


Next Story