அனைத்து தொலைதூர பஸ்களும் விருதுநகர் வந்து செல்ல வேண்டும்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


அனைத்து தொலைதூர பஸ்களும் விருதுநகர் வந்து செல்ல வேண்டும்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 10 Dec 2018 4:30 AM IST (Updated: 10 Dec 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி அனைத்து தொலைதூர பஸ்களும் விருதுநகருக்குள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகருக்கு வட மாவட்டங்களில் இருந்தும் தெற்கிலும் இருந்து வரும் தொலைதூர பஸ்கள் விருதுநகர் பயணிகளை ஏற்ற மறுக்கும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது. நீண்ட வற்புறுத்தலுக்கு பின்பு விருதுநகர் பயணிகளை ஏற்றினாலும் நகரிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கலெக்டர் அலுவலகத்திலோ அல்லது நகரின் வடபுறம் உள்ள பி.ஆர்.சி.பணிமனை முன்போதான் இறங்கிக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் விருதுநகருக்கான பயணச்சீட்டு வழங்கும் நிலை உள்ளது. ஏனெனில் தொலைதூர பஸ்கள் விருதுநகருக்கு வராமல் தவிர்ப்பதையே முனைப்பு காட்டும் நிலை இருந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் விருதுநகர் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

விருதுநகரில் சாத்தூர் ரோட்டில் கடந்த 1990–ம் ஆண்டு ரூ.56 லட்சம் உலக வங்கி கடன் உதவியுடன் கட்டப்பட்ட நகராட்சி புதிய பஸ் நிலையம் தொடர்ந்து செயல்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் அனைத்து தொலைதூர பஸ்களும் விருதுநகருக்குள் வந்து செல்லவேண்டும் என உத்தரவிட்ட மதுரை ஐகோர்ட்டு அவ்வாறு விருதுநகர் பழைய பஸ் நிலையத்திற்கு வர முடியாத நிலையில் பஸ் நிலையத்திற்கு அருகிலாவது வந்து செல்லவேண்டும் என அறிவுறுத்தியது.

தொலைதூர பஸ்கள் புதிய பஸ் நிலையத்தையும் முற்றிலும் தவிர்த்து வருகின்றன. மாவட்ட நிர்வாகம் பலமுறை முயற்சிகள் மேற்கொண்டும் தொடர்ந்து தொலைதூர பஸ்கள் விருதுநகருக்குள் வராமல் ஐகோர்ட்டு உத்தரவை காற்றில் பறக்க விட்டுபுறவழிச்சாலையிலேயே சென்றுவரும் நிலை தொடர்கிறது. போக்குவரத்து துறை அதிகாரிகளோ, போக்குவரத்துக்கழக நிர்வாகமோ மாவட்ட தலைநகரான விருதுநகரை தொலைதூர பஸ்கள் புறக்கணித்து செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாத நிலை வேதனை அளிக்கும் விசயமாகும்.

தற்போதுள்ள நிலையில் தொலைதூர பஸ்கள் புதிய பஸ் நிலையத்துக்கும் வராமல் சென்றுவிடுவதால் பெரும்பாலானோர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்து தொலைதூர பஸ்களில் ஏறிச்செல்லும் நிலை அதிகரித்து வருகிறது. இவ்வாறு அங்கு சென்று தொலை தூர பஸ்களில் ஏறுவோர் தங்களது இருசக்கர வாகனங்களை கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நிறுத்திவிட்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் கலெக்டர் அலுவலக வளாகம் கட்டணமில்லா வாகன காப்பகமாக மாறியுள்ளது. மாவட்டநிர்வாகமும் மாவட்ட போலீஸ் நிர்வாகமும் இதனை கண்டுகொள்வதில்லை.

விதிமுறைகளை மீறி விருதுநகருக்குள் அங்கீகரிக்கப்பட்ட பஸ் நிலையங்களுக்கு வந்துசெல்லாமல் புறவழிச்சாலையிலேயே செல்லும் போக்குவரத்துக்கழக பஸ்களின் ஊழியர்கள் மீதும் அதை அனுமதிக்கும் நிர்வாகிகத்தினர் மீதும் மாவட்ட போக்குவரத்துதுறை அதிகாரி என்ற முறையில் கலெக்டர் போக்குவரத்து துறையினர் மூலம் கடுமையான நடவடிக்கை எடுத்தால் தொலைதூர பஸ்கள் விருதுநகருக்குள் வந்து செல்லும் நிலை ஏற்படும்.

மாவட்ட தலைநகராக இருந்தும் அடிப்படை பஸ் வசதியை கூட மாவட்ட நிர்வாகம் செய்து தராமல் தயக்கம் காட்டுவது ஏனென்று தெரியவில்லை. இனியாவது போக்குவரத்து துறை, போக்குவரத்துக்கழக நிர்வாகம் போலீஸ் துறை ஆகியோரை அழைத்து கலந்தாய்வு செய்து தொலைதூர பஸ்கள் விருதுநகருக்குள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.


Next Story