கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம் நடத்த முடிவு
கீழக்கரையில் நேற்று மீனவர்களின் போராட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கீழக்கரை,
விதிமுறைகளை மீறி மீன் பிடிக்கும் விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன்வளத்துறை மற்றும் கலெக்டருக்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கீழக்கரையில் மீனவர்களின் போராட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கீழக்கரை நாட்டுப்படகு சங்க தலைவர் முனியசாமி, தலைமை வகித்தார். கூட்டுறவு மீனவர் சங்க உறுப்பினர்கள் ஹாஜா அலாவுதீன், களிமண்குண்டு பாண்டி, மங்களேஸ்வரி நகர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவாஜி, கடல்தொழிலாளர் மீனவர் சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில் ஏராளமான சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கலந்துகொண்டனர்.
கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 17–ந் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நடை பயணமாக சென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஏர்வாடி நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.