அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: அ.ம.மு.க.வில் இருந்து செந்தில்பாலாஜி விலகல்? ஆதரவாளர்களிடம் கருத்து கேட்டார்


அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: அ.ம.மு.க.வில் இருந்து செந்தில்பாலாஜி விலகல்? ஆதரவாளர்களிடம் கருத்து கேட்டார்
x
தினத்தந்தி 9 Dec 2018 11:00 PM GMT (Updated: 9 Dec 2018 8:23 PM GMT)

அ.ம.மு.க.வில் இருந்து செந்தில் பாலாஜி விலக திட்டமிட்டிருப்பதாக கரூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஆதரவாளர்களிடம் அவர் திடீரென கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார்.

கரூர்,

கரூரை சேர்ந்தவர் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி. டி.டி.வி.தினகரனின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் இவர், அ.ம.மு.க.வின் கரூர் மாவட்ட செயலாளராகவும், மாநில அமைப்பு செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் அரவக்குறிச்சி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த இவர் பின்னர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு இடைத்தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்கிற முனைப்புடன் அரவக்குறிச்சி தொகுதியில் பல்வேறு இடங்களிலும் தொண்டர்களை சந்தித்து களப்பணிகள் ஆற்றி வருகிறார். இதற்கிடையே அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட மாற்று கட்சியினர் சிலர் அ.ம.மு.க.வில் இணையும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடந்தன. இந்தநிலையில் டி.டி.வி.தினகரன் தன்னிச்சையாக முடிவு எடுத்து வருவதாக கரூர் அ.ம.மு.க.வினரிடையே அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் செந்தில்பாலாஜி, அ.ம.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணையப்போவதாக கரூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக செந்தில்பாலாஜியிடம் நிருபர்கள் கேட்டபோது, பதில் ஏதும் கூறவில்லை. அவர் மவுனம் காத்தார். இந்த நிலையில் நேற்று மாலை கரூர் ராமகிருஷ்ணாபுரத்திலுள்ள தனது அலுவலகத்தில் செந்தில்பாலாஜி, தன்னுடன் நெருக்கமாக உள்ள ஆதரவாளர்களை திடீரென்று வரவழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், டி.டி.வி.தினகரன் எதிர்பாராத முடிவுகளை அறிவித்தால் அதற்கான மாற்று தீர்வு என்ன? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

இது அ.ம.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் செந்தில்பாலாஜி இணைவதாக பரவிய தகவலை உறுதிப்படுத்தும் விதத்தில் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சிலர் தெரிவித்தனர். இதுதொடர்பாக தி.மு.க. முக்கிய நிர்வாகிகளிடம் கேட்ட போது, இது உறுதிப்படுத்தப்படாத தகவல். செந்தில்பாலாஜி இணைப்பு என்பது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து உறுதி செய்தால் தான் உண்மை என நம்பலாம். எனவே இதுபற்றி பேசுவது தவறு என்று கூறினர். இந்த சம்பவம் கரூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story