மத்திய அரசு மாநிலங்களின் உரிமை, அதிகாரங்களில் நேரடியாக தலையிடுகிறது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குற்றச்சாட்டு


மத்திய அரசு மாநிலங்களின் உரிமை, அதிகாரங்களில் நேரடியாக தலையிடுகிறது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 Dec 2018 11:15 PM GMT (Updated: 9 Dec 2018 8:39 PM GMT)

மத்திய அரசு மாநிலங்களின் உரிமை மற்றும் அதிகாரங்களில் நேரடியாக தலையிடுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

புதுச்சேரி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் மத்திய அரசின் நியமனம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு ஏற்புடையதல்ல. புதுச்சேரியில் கடந்த கால வரலாற்றின் பாரம்பரியத்தை நிராகரித்துள்ள வரலாற்று பிழையாகவே கருத வேண்டி உள்ளது. மத்திய அரசின் வக்கீல் முன்வைத்த வாதத்தின் அடிப்படையில் புதுச்சேரி மத்திய அரசின் சொத்து. ஆகவே மத்திய அரசு நியமித்த நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு குறிப்பிட்டுள்ளது வேதனைக்குரியது.

புதுவையில் 1985–ம் ஆண்டில் இருந்துதான் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். மாநில அரசின் பரிந்துரையின் பேரிலேயே மத்திய அரசு இதற்கு அனுமதி வழங்கி வருகிறது. இந்த நீண்டகால நடைமுறை தற்போது மீறப்பட்டுள்ளது. யூனியன் பிரதேச ஆட்சிப்பரப்பு சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யும்போது கடும் விவாதம் எழுந்தது. குறிப்பாக நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் தான் நடந்தது.

மத்திய பா.ஜ.க. அரசு தனது 4½ ஆண்டு ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை, ஜனநாயக அமைப்புகளை சிதைத்து வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசு கவர்னர் வழியாகவும், நேரடியாகவும் மாநிலங்களின் உரிமை, அதிகாரங்களில் தலையிடுகிறது. அதன்மூலம் தனது அரசியலை விரிவுபடுத்தவும், வலுப்படுத்தவும் முயல்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி தன்னிச்சையாக பா.ஜ.க.வை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக பரிந்துரைத்து பின்னர் அவர்களுக்கு பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.

நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவைக்குள் அனுமதித்தால்தான் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க முடியும் என்ற மிரட்டல் உள்ளிட்ட பல வழிமுறைகளை கையாண்டார். தற்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவர் குதூகலமாக வரவேற்றுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.

எனவே புதுவை அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். புதுச்சேரி மத்திய அரசின் சொத்து என்கிற வார்த்தையை நீக்கி மக்களின் காயம்பட்ட உணர்வுக்கு நிவாரணம் அளித்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கான போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story