பெண் போலீசிடம் நகை பறிப்பு: போலீசார் விரட்டிச்சென்ற போது ஏரியில் குதித்த கொள்ளையர்கள் ஒருவர் பிடிபட்டார்


பெண் போலீசிடம் நகை பறிப்பு: போலீசார் விரட்டிச்சென்ற போது ஏரியில் குதித்த கொள்ளையர்கள் ஒருவர் பிடிபட்டார்
x
தினத்தந்தி 9 Dec 2018 11:00 PM GMT (Updated: 9 Dec 2018 9:05 PM GMT)

தஞ்சை பெண் போலீசிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் விரட்டிச்சென்ற போது ஏரியில் குதித்தனர். ஒருவர் பிடிபட்டார். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூரை சேர்ந்தவர் சண்முகநாதன். இவருடைய மனைவி புவனேஸ்வரி(வயது35). 2-ம் நிலை போலீஸ்காரரான இவர் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணி புரிந்து வருகிறார். இதனால் குடும்பத்தினருடன் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையம் அருகே உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு வந்த புவனேஸ்வரி, கடைக்கு செல்வதற்காக வெளியே சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் புவனேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு சென்று விட்டனர். இது குறித்து தமிழ்ப்பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் புவேனேஸ்வரி, மர்ம நபர்கள் வந்த மோட்டார்சைக்கிள் நம்பரை குறித்து வைத்து போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தனிப்படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், போலீஸ்காரர்கள் சாந்தகுமார், இளவரசன் ஆகியோர் திருச்சிக்கு வழக்கு தொடர்பாக காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பெண் போலீஸ் தெரிவித்த மோட்டார்சைக்கிள் நம்பர் பொறித்த வாகனம் செங்கிப்பட்டியில் உள்ள மதுக்கடை அருகே நின்றது. அதன் அருகே 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களின் அங்க அடையாளங்களை பார்த்த போது அவர்கள் தான் பெண் போலீசிடம் நகையை பறித்த கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களை காரில் இருந்தபடியே கண்காணித்தனர். அப்போது மோட்டார்சைக்கிளில் 2 பேரும் ஏறி சென்றனர். அவர்களுக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் கணவன்- மனைவி சென்று கொண்டு இருந்தனர். அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த நகையை மோட்டார்சைக்கிளில் சென்ற கொள்ளையர்கள் பறிக்க முற்பட்டனர்.

இதனைப்பார்த்த காரில் சென்ற போலீசார் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். இதையடுத்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றனர். பழையகரியாப்பட்டி என்ற இடத்தில் சென்ற போது போலீசாரை கத்தியை காட்டி மிரட்டியதோடு, மோட்டார்சைக்கிளை போட்டு விட்டு அருகில் இருந்த ஏரிக்குள் கொள்ளையர்கள் குதித்தனர்.

போலீசாரும் விரட்டிச்சென்று ஏரிக்குள் இறங்கி கொள்ளையர்களை தேடினர். அப்போது அங்கிருந்த முட்புதருக்குள் பதுங்கி இருந்த ஒருவரை மடக்கி பிடித்து வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அரக்கோணத்தை சேர்ந்த சுகுமார் மகன் சுரேஷ்குமார் (வயது22) என்பது தெரிய வந்தது.

அவருடன் மோட்டார்சைக்கிளில் வந்தது புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை சேர்ந்த ஒயிட் என்ற வெள்ளைச்சாமி என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடினர். ஆனால் அவர் முட்புதருக்குள் பதுங்கிக்கொண்டார். இருக்கும் இடம் தெரியவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வல்லம், செங்கிப்பட்டி போலீசாரும் வந்து தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

இதையடுத்து ஹெலிகேமரா மூலம் தண்ணீருக்குள் கொள்ளையர் வெள்ளைச்சாமி எந்த இடத்தில் பதுங்கி இருக்கிறார் என பார்த்தனர். ஆனால் வெள்ளைச்சாமி சிக்கவில்லை. அதற்குள் இருள் சூழ்ந்து விட்டதால் மேற்கொண்டு தேட முடியவில்லை. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் தனிப்படை போலீசார், பிடிபட்ட சுரேஷ்குமாரை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story