நமது பிரிவை பயன்படுத்தி தி.மு.க. வெற்றி பெறக்கூடாது: ‘அ.ம.மு.க.வுடன், அ.தி.மு.க.வை இணைத்து கொள்ளுங்கள்’ - தங்கதமிழ்செல்வன் வேண்டுகோள்
நாம் பிரிந்து இருப்பதை பயன்படுத்தி தி.மு.க. வெற்றி பெற்றுவிடக்கூடாது, எனவே அம்மா மக்கள் முன்னேற்றகழகத்துடன் அ.தி.மு.க.வை இணைத்துக் கொள்ளுங்கள் என்று தங்கதமிழ்செல்வன் கூறினார்.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு உளவுத்துறையின் மூலம் நடத்திய ஆய்வில் அ.தி.மு.க.வுக்கு பலம் இல்லை, மக்கள் செல்வாக்கு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அ.தி.மு.க. தொண்டர்களில் பெரும்பாலானோர் அ.ம.மு.க. வில் தான் உள்ளனர். இந்த சூழலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது.
எனவே அ.தி.மு.க.வை, அ.ம.மு.க.வுடன் சேர்த்தால் நல்லது என்ற செய்தியை சிலர் பரப்பி விட்டுள்ளனர். இந்த செய்தியை நான் வரவேற்கிறேன். எங்களுடன் வந்து இணைந்தால், எம்.ஜி.ஆர். தொடங்கி, ஜெயலலிதா வளர்த்த கட்சியுமான அ.தி.மு.க. மென்மேலும் வளரும்.
முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் வருவார்களா? என்பது குறித்து கருத்து இல்லை. சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு தான் மக்கள் செல்வாக்கு உள்ளது என்பதை ஒத்துக் கொள்ளுங்கள். நாம் பிரிந்து இருப்பதை பயன்படுத்தி தி.மு.க. கூட்டணி எளிதாக வெற்றி பெற்று விடக்கூடாது. அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு இடம் கொடுக்க கூடாது. இதுவரை அனுபவித்தது போதும். அனைவரும் பல்வேறு பதவிகளை அனுபவித்துவிட்டீர் கள். இதனை புரிந்து நீங்கள் (அ.தி.மு.க.) அ.ம.மு.க.வில் இணைந்தால் நல்லது என்பது தான் எங்கள் கருத்து.
நான் அன்றாடம் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறேன். தொண்டர்களின் மனதில் உள்ள கருத்துக்களை தான் நான் கூறுகிறேன். தேர்தலுக் காக எங்களுடன் கூட்டணி வருபவர்களை ஏற்றுக்கொள்வோம். இல்லையென்றால் அ.ம.மு.க. தனித்து போட்டியிட்டு மகத்தான வெற்றியை பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story